செய்திகள்

புதுவை அருகே ஆரோவில் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஊழியர் வெட்டிக்கொலை

Published On 2017-05-04 10:20 GMT   |   Update On 2017-05-04 10:20 GMT
ஆரோவில் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஊழியரை 2 பேர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் ஆரோவில்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அருகே சர்வதேச நகரமாக ஆரோவில் உள்ளது. இங்கு பல்வேறு வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குதிரையேற்ற போட்டி நடைபெறும்.

இதற்காகவே அங்கு குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது. இந்த குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் ஆரோவில் அருகே உள்ள இடையன் சாவடியை சேர்ந்த வீர பத்திரன் (வயது 38) என்பவர் குதிரைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மாலை பணி முடித்த பின்னர் வீடு திரும்பிய வீரபத்திரன் அதன் பின்னர் இரவு திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

குதிரையேற்ற பயிற்சி பள்ளியை கடந்து சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வீரபத்திரனை வழிமறித்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே வீரபத்திரனை அரிவாளால் வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து வீரபத்திரனை வெட்டி கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், ஆரோவில்லில் தங்கி உள்ள வெளிநாட்டினர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News