செய்திகள்

அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

Published On 2017-04-28 07:31 GMT   |   Update On 2017-04-28 07:48 GMT
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து பேசினார்.
சென்னை:

தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று பகல் 12.15 மணிக்கு அறிவாலயம் சென்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட அனைத்துகட்சியினர் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்திற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விவசாயிகளின் பிரச்சினைக்காக அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பற்றியும் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தார்.

இருவரும் சுமார் 20 நிமிடநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தையே இந்த அரசு ஏமாற்றபார்க்கிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்ததாக போலீசில் எப்.ஐ.ஆர். உள்ளது.

நாங்கள் முதல்-அமைச்சரை அடுத்த வாரம் கண்டிப்பாக சந்திப்போம் அப்போது இது பற்றி அவரிடம் கேட்போம். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் தலைமை செயலகத்திலிலேயே உண்ணவிரதம் இருப்போம். மறியலில் ஈடுபடுவோம்.

டெல்லியில் எங்களை முதல்-அமைச்சர் சந்தித்த போது அவரது பேச்சை நம்பினோம். கடன் தள்ளுபடி வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் இப்போது அதற்கு நேர் மாறாக உச்ச நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது. மாறுபட்ட கருத்துக்களை அரசு தெரிவித்து வருவதால் அதை எதிர்த்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News