செய்திகள்

வைகை அணையில் தெர்மாக்கோல்: ‘வாட்ஸ் அப்’களில் கேலி - கிண்டல்

Published On 2017-04-23 09:05 GMT   |   Update On 2017-04-23 09:05 GMT
வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோலை மிதக்க விட்ட நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் உலா வருகிறது.
வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அதன் மேலே தெர்மாக்கோல் மிதக்கவிடும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அந்த தெர்மாக்கோல்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டு கிழிந்து கரை ஒதுங்கின.

இதை விமர்சனம் செய்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் உலா வருகிறது. அதை காணலாம்:-

* தமிழகத்தில் நிலவும் கடுமையான வெயிலை கட்டுப்படுத்த சூரியனுக்கு குளிர் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) அணிவிக்கும் மாபெரும் திட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பு.

* கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடைபிடிக்கும் திட்டம் அறிமுகம்.

* ஓசோனில் உள்ள ஓட்டையை 'செல்லோ டேப்' கொண்டு ஒட்டும் திட்டம்.

* வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்.

* அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்.

* வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்.

* ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க தண்ணீரை பாட்டிலில் சேமிக்கும் திட்டம்.

* அனல் காற்றை தடுக்க தமிழகத்தில் 4 மூலைகளிலும் ஏசி வைக்க முடிவு.

* சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.

* மதுரை வீதிகளில் அச்சடித்து வைத்துள்ள போஸ்டர்களையும், பேனர்களையும் அள்ளிப் போட்டு எடுத்து வந்து ஆற்றின் மேற்பரப்பில் விரித்து விடலாம். வைகை மட்டுமல்ல... கோதாவரி, காவிரி நதிகளையும் சேர்த்து மூடும் அளவிற்கு பேனர்கள் கொட்டிக் கிடக்கின்றன. சும்மா முயற்சி பண்ணுங்க. முயற்சி திருவினையாக்கும். முயன்றால் சாதிக்க முடியும்.

* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இருப்பதுபோல் கலர் கலர் குடைகளால் பந்தல் வேயலாம். குறிப்பாக டோரா, டாம் அட் ஜெரி படம் வரைந்து கைப்பிடியில் விசில் தொங்கும் குடைகளாய் வாங்கி வந்து வேயலாம். சும்மா கலர்புல்லா இருக்கும்.

* கொசுவுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு.

* ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தொப்பிகளை மலிவு விலைக்கு பேரம் பேசி வாங்கி வந்து அவற்றையெல்லாம் ஆற்றின் மேல் தூக்கி எறிந்தால் அதை பயன்படுத்தி ஆற்றுத் தண்ணீர் சூரியனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளும்.

* ஆறு பாயும் இடத்தில் வெயில் கொளுத்துவதால்தான் அத்தனை பிரச்சினையும். எனவே எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை அள்ளிய வாளிகளைக் கொண்டோ அல்லது கொட்டாங்குச்சிகளைக் கொண்டோ ஆற்றுநீரை அள்ளிக்கொண்டு போய் நிழலான பகுதியில் ஊற்றி வைக்கலாம்.

* கோடை காலங்களில் நமது உடலிலுள்ள நீரை சூரியன் ஸ்ட்ரா போட்டு உறியும் என விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து தப்பிக்க குளுக்கோஸ் சாப்பிட சொல்வார்கள். அதனால் சூரியனை எதிர்த்து போராட ஆற்றுநீரில் டன் டன்னாக குளுக்கோஸ் வந்து கொட்டி விடலாம். முடிந்தால் வியர்க்கூறு பவுடரையும் சேர்த்து கொட்டி விடலாம்.

* வேட்டையாடி பிடிக்கும் திருட்டு வி.சி. டி.க்களை எல்லாம் ஒன்றாக கோர்த்து ஆற்றின் மேல் மிதக்க விடலாம். குறிப்பாக டி.வி.டி.யை மல்லாக்க படுக்கப்போட்டால் சூரியக் கதிர்களை பிரதிபலித்து வானத்திற்கே திருப்பி அனுப்பி விடும்.

* உதயசூரியனின் சதியில் இருந்து வைகை ஆற்றை நாங்கள் காப்பாற்றி விட்டோம் என அறிக்கை கொடுத்து விட்டு மூட்டை முடிச்சோடு வீட்டுக்கு கிளம்பலாம்.

* தெர்மோகோல் திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள அடுத்தவாரம் நாசா விஞ்ஞானிகள் தமிழகம் வருகிறார்கள்.

* செல்லூர் ராஜு, இனி தெர்மாகோல் ராஜு என அழைக்கப்படுவார்.

* ஏங்க குழாய்ல ஜவ்வரிசியா வருது. அடியே அது அமைச்சர் போட்ட தெர்மா கோல்.

Similar News