செய்திகள்
மீனவர்களின் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

மீனவர் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும்: ஸ்டாலின் உறுதி

Published On 2017-03-11 04:50 GMT   |   Update On 2017-03-11 04:50 GMT
மீனவர் போராட்டத் திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். அவர்களது பிரச்சனையை தீர்க்க கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். இதனை கண்டித்தும், இலங்கை கடற்படையினரை கைது செய்ய வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

5-வது நாளாக இன்று போராட்டம் நடத்தும் அவர்களை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். பலியான பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிதாவது:-

21 வயது இளைஞர் பிரிட்ஜோவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவிக்க தங்கச்சிமடம் வந்தேன். இங்கு 5-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

5 நாட்கள் போராட்டம் நடைபெற்றும், இதுவரை மத்திய அரசு சார்பில் இலங்கை அரசை கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ இல்லை. அரசு வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீடு எங்களுக்கு தேவையில்லை. இது போன்ற துயர சம்பவம் எந்தவொரு மீனவர்களுக்கும் இனி ஏற்படக்கூடாது என்ற உறுதிதான் தேவை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமான உறுதிமொழியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி அல்லது வெளியுறவுத்துறை செயலாளர் நேரிடையாக வந்து பதில் அளிக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டும், இதுவரை யாரும் வரவில்லை.

நான் (மு.க.ஸ்டாலின்) தி.மு.க. சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் நகலை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் நேரில் கொடுத்துள்ளார். கனிமொழி எம்.பி.யும் இந்த பிரச்சனை குறித்து பேச பாராளுமன்றத்தில் நேரம் கேட்டார். அதற்கு நேரம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்ஜோவின் தாயாருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.

மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. அதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த 2012-ம் ஆண்டு கேரள மீனவர்கள் 2 பேர் இத்தாலி கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். இந்த வி‌ஷயத்தில் கேரள அரசு அழுத்தம் கொடுத்ததால் இத்தாலி கடற்படை கப்பல் சிறைபிடிக்கப்பட்டு கொச்சியில் நிறுத்தப்பட்டது.

இத்தாலி கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலியான மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசும், தமிழக அரசும் மீனவர் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்த வி‌ஷயத்தில் மீனவர் கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். அவர்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News