செய்திகள்

நெடுவாசல் எரிவாயு திட்டத்துக்கு எதிராக சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் மீண்டும் திரள திட்டமா?

Published On 2017-02-27 07:31 GMT   |   Update On 2017-02-27 07:31 GMT
புதுக்கோட்டையில் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவு தகவலால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. அப்போது தமிழகத்தை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்போம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நெடுவாசலில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நெடுவாசல் கிராம மக்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்வேறு அமைப்பினரும் நெடுவாசலில் முகாமிட்டு போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதுபோன்று திரண்ட இளைஞர்களின் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக சென்னையில் மெரினாவில் திரண்ட லட்சக்கணக்கான மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.



மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல மாணவர்கள் எரிவாயு திட்டத்துக்கு எதிராகவும் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் கவனமுடன் உள்ளனர். இதற்காக மெரினாவிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு அரசியல் பரபரப்பு ஏற்பட்ட சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாணவர்கள், மெரினாவில் திரள இருப்பதாக கிடைத்த தகவலால் போலீசார் சில நாட்களுக்கு முன்னர் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இயற்கை எரிவாயு திட்டத்துக்காக இளைஞர்கள் திரள்வார்கள் என்கிற தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News