செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம்

Published On 2017-01-05 11:14 GMT   |   Update On 2017-01-05 11:14 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்ட 15 ஆயிரத்து 703 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1.9.2016 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் பதிவு இடம் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 61 ஆயிரத்து 710 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 897 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 57 ஆயிரத்து 813 மனுக்கள் ஏற்கப்பட்டு கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் இறந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்ததாக 7 ஆயிரத்து 704 மனுக்கள், இருப்பிடம் மாறி இருந்த வகையில் 4 ஆயிரத்து 903 மனுக்கள் இரட்டைப்பதிவு வாக்காளர்கள் 3 ஆயிரத்து 925 என மொத்தம் 15 ஆயிரத்து 703 வாக்காளர்கள் போலியானவை என கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் வெளியிட்டார். இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 17 லட்சத்து 42 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 8 லட்சத்து 56 ஆயிரத்து 925 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 85 ஆயிரத்து 135 ஆகும். 3-ம் பாலினம் 148 வாக்காளர்கள். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 420-ம், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 155-ம் இதர 41 என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் வேலை நாட்களில் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News