செய்திகள்

வீடு, கார் கடன்களுக்கு மாத தவணையை வசூலிக்கும் வங்கிகள்

Published On 2016-12-03 10:21 GMT   |   Update On 2016-12-03 10:21 GMT
ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி வீடு, கார் கடன்களுக்கு மாத தவணையை வசூலிப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை:

கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை யால் பணப்பழக்கம் குறைந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் தேவையான அளவு பணம் எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளதால் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை விதித்துள்ளது.

பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன், இருசக்கர வாகனக் கடன், கார், தனிநபர்கடன் ஆகியவற்றிற்கான மாத தவணையை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதத்திற்கும் தவணையை செலுத்தாமல் ஜனவரியில் இருந்து செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு சில தனியார் வங்கிகள் நவம்பர் மாத இறுதியில் தங்களிடம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம் .எஸ்.மூலம் தகவல் அனுப்பி உஷார்படுத்தின.

தங்களது வங்கிகணக்கில் போதுமான பணத்தை இருப்பு வைத்துக்கொள்ளவும் என்று தகவல் அனுப்பின. அதன்படி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து சம்பளம் போட்ட உடன் குறிப்பிட்ட தேதியில் இசிஎஸ் முறையில் பணத்தை எடுத்துக் கொண்டன.

ரூபாய் நோட்டு பிரச்சனையில் அல்லல்பட்டு வரும் இந்த நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடனை வசூலிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி தனியார் வங்கிகள் கடும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மனம் குமுறுகின்றனர்.

இது குறித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவு அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானது. அரசு வங்கிகளில் கடன் வசூல் செய்ய 2 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வராக்கடன் பட்டியலில் (சிபில்) கடன் தாரர்களின் பெயர் இணைக்கப்பட மாட்டாது என்றார்.

Similar News