செய்திகள்
மடத்துக்குளம் பிரசாரத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி

தைரியம் இருந்தால் எனது வீட்டில் சோதனை நடத்துங்கள் - மடத்துக்குளம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-04-02 10:16 GMT   |   Update On 2021-04-02 16:17 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு எனவும் மாநில உரிமை காக்கப்படும் எனவும் மடத்துக்குளம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று எனது தங்கை செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளனர். தைரியம் இருந்தால் சென்னையில் உள்ள எனது வீட்டில் சோதனை நடத்துங்கள்.

மோடி-அமித்ஷாவுக்கு பயப்படவோ, கூழை கும்பிடு போடவோ நான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அல்ல. முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன். எந்த உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். இருவரின் தூண்டுதலின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வில் உள்ள கடைசி தொண்டன் வரை ஐ.டி.ரெய்டுக்கு பயப்படமாட்டான்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கலைஞர், ஜெயலலிதா நீட் தேர்வை தமிழகத்தில் உள்ளே வரவிடவில்லை. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாநில உரிமை காக்கப்படும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க ஜூன் 3-ந்தேதி கலைஞர் பிறந்தநாளில் ரூ.4ஆயிரம் வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆனைமலை -நல்லாடு திட்டம், அப்பர்- அமராவதி திட்டங்கள் நிறைவேற்றப்படும். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது. ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனவர். அதனால் அவருக்கு முதல்வர் பதவியை பற்றி எதுவும் தெரியவில்லை.

ஜெயலலிதாவை 80-நாள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது பற்றி விசாரணை நடத்தப்படும்.

அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஓட்டு கேட்க வரும் போது மக்களாகிய நீங்கள் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் போல் செயல்படுகிறார்.


அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு 32 வயதுதான் ஆகிறது. ஆனால் இப்போது அவரது சொத்து ரூ.120கோடி. ஆனால் என்னை பற்றி குறை சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். அமித்ஷா மகன்அவருடைய சொத்தை எனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லுங்கள். நான் எனது சொத்துக்களை அவரது பெயருக்கு எழுதி வைக்கிறேன். கிரிக்கெட் விளையாட தெரியாத அமித்ஷா மகன் இன்று கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார். போலி என்கவுண்டர் விவகாரத்தில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்தான் அமித்ஷா. சிறையில் கம்பி எண்ணியவர்.

தமிழகத்தில் நல்லாட்சி மலர தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News