செய்திகள்
திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 'பானை' சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்

Published On 2021-03-22 11:48 GMT   |   Update On 2021-03-22 11:48 GMT
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘பானை’ சின்னம் ஒதுக்கியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காட்டுமன்னார் கோவில் - சிந்தனை செல்வன், வானூர் - வன்னி அரசு, அரக்கோணம் - கௌதம சன்னா, செய்யூர் - பாபு, திருப்போரூர் - பாலாஜி, நாகப்பட்ட்டினம் - ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடுகின்றனர். 

தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று தனிச்சின்னம் ஒதுக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் ‘பானை’ சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News