செய்திகள்
கேஎஸ் அழகிரி

234 தொகுதிகளிலும் அதிமுக போர்வையில் பா.ஜனதா போட்டியிடுகிறது- கேஎஸ் அழகிரி

Published On 2021-03-19 07:36 GMT   |   Update On 2021-03-19 07:41 GMT
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தை ஆள வேண்டியது தமிழகமா? அல்லது டெல்லியா? என்பது தான் முழக்கமாக இருக்கும்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தை ஆள வேண்டியது தமிழகமா? அல்லது டெல்லியா? என்பது தான் முழக்கமாக இருக்கும்.

இதை முன் வைத்தே நாங்கள் பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்த சிறப்புத்திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. சிறப்பு நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. அதை கேட்டு வாங்கும் தகுதியும் மாநில அரசிடம் இல்லை. எனவே இந்த அரசு அகற்றப்படவேண்டிய அரசு.

20 தொகுதிகளில் மட்டுமே பாரதீய ஜனதா போட்டியிடுவதாக நினைப்பது தவறு. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. என்ற போர்வையில் பா.ஜனதா தான் போட்டியிடுகிறது.

இந்த அணியை மக்கள் புறக்கணிப்பார்கள். நாளை முதல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்குகிறேன்.

நாளை காலை வேளச்சேரியில் இருந்து எனது பிரசாரம் தொடங்குகிறது. நாளை மறுநாள் கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறேன். 3-ந் தேதி மதுரையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறேன்.

ராகுல்காந்தியை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து உள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோபண்ணா, பொன் கிருஷ்ண மூர்த்தி, முனிஸ்வர், கணேசன், கீழானூர் ராஜேந்திரன், எஸ்.கே.வாசு, காண்டீபன், அகரம் கோபி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News