செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தமிழகத்தில் 3 கட்ட பிரசாரம்- 9 பொதுக்கூட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார்

Published On 2021-03-14 07:41 GMT   |   Update On 2021-03-14 07:41 GMT
பிரதமர் மோடி, ராகுல் காந்தி இருவரும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுதாக்கலுக்கு வருகிற 19-ந்தேதி கடைசி நாளாகும். 22-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

அதைதொடர்ந்து அனைத்து வேட்பாளர்களும் ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபடுவார்கள். மேலும் தலைவர்களும், மாநிலம் முழுவதும் சூறாவளிப்பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவார்கள்.

22-ந் தேதிக்கு பிறகு வாக்குப்பதிவுக்கு குறுகிய நாட்களே உள்ளது. எனவே மின்னல் வேக பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டி உள்ளது.

தமிழக தலைவர்களை தவிர்த்து தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களாக பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

பிரதமர் மோடி ஏற்கனவே கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளார். ராகுல் காந்தி 2 தடவை வந்து ஆதரவு திரட்டியிருக்கிறார். முதலாவதாக மேற்கு மண்டலத்திலும், பின்னர் தெற்கு மண்டலத்திலும் அவர் பிரசாரம் செய்தார்.

அடுத்ததாக அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 3 கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு தடவை வரும்போதும் குறைந்த பட்சம் 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் வகையில் பாரதிய ஜனதா ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதன் மூலம் 9 கூட்டங்களில் அவர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கோவை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டுவிட்டதால் இனி வரும்போது மற்ற இடங்களில் பிரசாரம் செய்வார். அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, சேலம், தஞ்சை போன்ற இடங்களில் அவர் பேச உள்ளார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பிரசாரம் செய்யும் திட்டமும் இருக்கிறது.

அங்கு சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி, பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. அதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.

அங்கு பாரதிய ஜனதா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கருதுவதால் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களில் பேச வாய்ப்பு உள்ளது. அருகில் உள்ள நெல்லை அல்லது தூத்துக்குடியிலும் பிரசாரம் செய்யலாம்.

இந்த மாதம் 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் 3 கட்ட பிரசாரத்தை பிரதமர் முடிக்க இருக்கிறார். அவரது பயண திட்ட ஏற்பாடுகளை பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வகுத்து வருகிறார்கள்.

இதேபோல ராகுல்காந்தியும், பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Tags:    

Similar News