செய்திகள்
கண்ணன் அருளிய கீதை

ஆன்மிக அமுதம் - கண்ணன் அருளிய கீதை

Published On 2021-10-22 09:15 GMT   |   Update On 2021-10-22 09:15 GMT
ராம நாமத்தின் பெருமைகளைச் சொல்வதன் மூலம் ராமனின் பெருமைகளை மட்டும்தான் சிவபிரான் மெச்சுவாரா என்ன? அவர் கிருஷ்ணர் அருளிய கீதையின் பெருமைகளைச் சொல்லி, கிருஷ்ண பகவானையும் கொண்டாடுகிறார்.
ராம நாமத்தின் பெருமைகளை சிவன் பார்வதியிடம் விளக்கியது பலரும் அறிந்த செய்தி. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எந்த ஒரே ஒரு நாமத்தைச் சொன்னால் திருமாலின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்று பரமசிவனிடம் கேட்கிறாள் பார்வதி.

`ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே!` என்ற பதில் மூலம், ராம நாமம் திருமாலின் மற்ற எல்லா நாமங்களையும் சொன்ன பலனைத் தரக்கூடியது என்று விளக்குகிறார் பரமசிவன்.

ராம நாமத்தின் பெருமைகளைச் சொல்வதன் மூலம் ராமனின் பெருமைகளை மட்டும்தான் சிவபிரான் மெச்சுவாரா என்ன? அவர் கிருஷ்ணர் அருளிய கீதையின் பெருமைகளைச் சொல்லி, கிருஷ்ண பகவானையும் கொண்டாடுகிறார்.

பார்வதி, கண்ணன் அருளிய கீதையின் பெருமைகளைப் பற்றிக் கேட்க அப்போது சிவன் அருளியதாக `கீத மகாத்மியம்` என்றொரு நூல் உள்ளது.

கீதை என்றால் பாடப்பட்டது அல்லது உபதேசம் செய்யப்பட்டது என்று பொருள். கீதம் என்றாலே பாட்டுத் தானே?
`உத்தவ கீதை, ஹம்ச கீதை, அவதூத கீதை, உத்தர கீதை, அஷ்டாவக்ர கீதை, சிவகீதை` என்றிப்படிப் பற்பல கீதைகள் நம் ஆன்மிக நெடும்பரப்பில் உண்டு. என்றாலும் அதிகம் புகழ்பெற்று விளங்குவது கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த பகவத் கீதைதான்.

கீதைக்குக் காலந்தோறும் பற்பலர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய முப்பெரும் சமயப் பெரியோர் எழுதியுள்ள உரைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் எழுதிய உரை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என அவர்கள் நிறுவிய கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

வட இந்திய கிருஷ்ண பக்தர்களான வல்லபாச்சாரியார், ஞானேஸ்வரர் போன்றோரின் கீதை உரைகளும் புதிய விளக்கங்களோடு நம் ஆன்மிக உலகை அலங்கரிக்கின்றன.

தற்காலத்தில் கீதைக்கு வினோபாபாவே குட்டிக்கதைகளுடன் ஓர் உரை வழங்கியிருக்கிறார். அது சிறையில் சக கைதிகளுக்கு அவர் ஆற்றிய கீதைச் சொற்பொழிவுகளின் நூலாக்கம்.

மகாத்மா காந்தியின் பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் ஒரு தொகுப்பு முழுவதும் பகவத் கீதையின் விளக்கமே. பகவத் கீதையே தம் வாழ்வின் ஆதாரமாக அமைந்த நூல் என்றும் அதுசொல்லும் தத்துவங்களை அறிந்த பின்னரே தம் சொந்த வாழ்வின் சோகங்களிலிருந்து தாம் முழுமையாக விடுபட்டதாகவும் காந்தி கூறியிருக்கிறார்.

`குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா` எனக் கண்ணனைக் கொண்டாடிப் பாட்டெழுதிய மூதறிஞர் ராஜாஜி, கீதையையே தம் வாழ்வின் ஆதார நூலாக வைத்துக் கொண்டார்.

பாலகங்காதர திலகர், சின்மயானந்தர், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், சிவானந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னிபெசன்ட் அம்மையார், திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் என இன்னும் எத்தனையோ பேரின் உரைகளால் கீதை விளக்கம் பெற்றிருக்கிறது.

திருக்குறள், கீதை இரண்டும் பாரதத்தின் என்றென்றும் அழியாத மாபெரும் பொக்கிஷங்கள்.

ஆங்கிலத்தில் கீதை மொழிபெயர்க்கப் பட்டபோது அதற்கு முன்னுரை எழுதியவர் ஆங்கிலேய ஆட்சியாளரான வாரன் ஹேஸ்டிங்ஸ். கீதையின் பல பெருமைகளைப் பட்டியலிடும் அவர் இறுதியில் முத்தாய்ப்பாகச் சொல்லும் வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

`இங்கிலாந்து இந்தியாவை இழக்க நேரிட்டாலும் பாரதத்தின் பொக்கிஷமான கீதையின் கோட்பாடுகளை அது நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து எப்போதும் மேன்மையுற்று விளங்கும்` என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

ஜெர்மன் தத்துவ அறிஞரும் சம்ஸ்க்ருத வல்லுநருமான மாக்ஸ்முல்லர் கீதையில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார். கீதையை மொழிபெயர்த்தவர்களில் அவரும் ஒருவர்.

ஸ்ரீஅரவிந்த அன்னைக்குத் தொடக்கத்தில் இந்திய ஆன்மிகத்தில் ஈடுபாடு வரக் காரணமாயிருந்த நூல் அவர் வாசித்த பகவத் கீதை மொன்ழிபெயர்ப்பு நூல்தான்.

கீதை மகாபாரதப் போர் நடைபெறும் குருட்சேத்திரத்தில் உபதேசிக்கப் பட்டது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே யுத்தம் தொடங்கும் தருணம். வீரர்கள் இரு தரப்பிலும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

எதற்கும் அஞ்சாத மாவீரனான அர்ச்சுனன் எதிரணியைப் பார்வையிட்டான். என்ன சங்கடம்! எதிரணியில் போருக்கு ஆயத்தமாக நின்று கொண்டிருக்கும் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் அவன் சகோதரர்கள். பீஷ்மர் போன்றோர் அர்ச்சுனனின் ஆசிரியர்கள்.

சொந்தச் சகோதரர்களையும் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் எதிர்த்தா போர் செய்வது? அவர்களையா கொல்வது?
அவன் மனம் மயங்கியது. அபார வலிமை கொண்ட தன் வில்லான காண்டீபத்தைக் கீழேபோட்ட அர்ச்சுனன் தளர்ச்சி அடைந்தவனாய்ப் போரிட மறுத்தான்.

அர்ச்சுனனின் தேரோட்டி கண்ணனல்லவா? `பார்த்த சாரதி` என்று அதனால்தானே கண்ணன் அழைக்கப்படுகிறான்?
அர்ச்சுனனுக்குப் போரிடும் உத்வேகம் வரும் வகையில் கண்ணன் கீதையை உபதேசித்தான்.

போர்க்களத்தில் சொல்லப்பட்ட நூல் அது. இப்படிப் போர்க்களத்தில் தோன்றிய நூல் உலகில் வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

`போரில் உடல்தான் கொல்லப்படுகிறதே அன்றி ஆன்மாவல்ல. ஆன்மா ஒருபோதும் அழிவதில்லை. அதை யாரும் துன்புறுத்த இயலாது. அதை நீர் நனைக்காது. நெருப்பு சுடாது. காற்று உலர்த்தாது. ஆன்மாவை யாராலும் கொல்ல முடியாது.

அதனால் யாருக்காகவும் நீ வருத்தப் படத் தேவையில்லை. நீ கொல்லப் போவது எதிரிகளின் உடலைத்தான். நீ கொல்லாமல் விட்டுவிட்டாலும் எதிரிகள் சாகாமல் நிரந்தரமாய் இருக்கப் போவதில்லை. அர்ச்சுனா! இந்த உண்மையை உணர்வாயாக!

எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுவிட்டு உடனே உன் அபாரமான வலிமை நிறைந்த காண்டீபத்தை எடுத்துப் போர் புரி! யுத்த களத்தில் கோழைபோல் பின்வாங்காதே!`

என அறிவுறுத்துகிறார் கிருஷ்ணர். கண்ணனின் உபதேசத்தால் தெளிவுபெற்ற அர்ச்சுனன் எழுச்சியுடன் போரிடத் தொடங்குகிறான்.

மகாபாரதமும் கீதை சொல்லும் போர்க்களமும் கீதை உபதேசமும் கதைபோல் தோன்றினாலும் அந்தக் கதையின் ஊடாகப் பல உட்பொருள்கள் உணர்த்தப்படுகின்றன.

பஞ்ச பாண்டவர்கள் மெய் வாய் கண் மூக்கு செவி எனற நம் ஐம்புலன்களின் உருவகம். இவற்றின் உள்ளிருந்து செயல்படும் ஆன்மாவே பாஞ்சாலியாகிய திரௌபதி. நம் மனமே போர்க்களம். தீய உணர்வுகளே கௌரவர்கள்.

நாம் வாழ்க்கைப் போரில் மனத்தில் தோன்றும் தீய உணர்வுகளை வலிமையோடு போரிட்டு அழிக்க வேண்டும். அவ்விதம் அழிப்பதில் தளர்ச்சியோ தயக்கமோ கொள்ளக் கூடாது. அப்படித் தீய உணர்வுகளை நம் மனத்திலிருந்து அழித்து விடுவோமானால் வாழ்வில் நாம் வெல்வது உறுதி.

இதை உருவகமாக விளக்குவதே மகாபாரதக் கதை. மனத்தில் தோன்றும் தீய உணர்வுகளை வெல்ல வேண்டும் என்பதைப் பதினெட்டு அத்தியாயங்களில் படிப்படியாக விளக்கமாக எடுத்துச் சொல்வதே பகவத் கீதை.

அர்ச்சுனன் தன் சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்க அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உத்தியில் அமைந்துள்ளது கீதை.
வீடுபேற்றைத் தருவது ஆன்மீகம் என்றும் அது உலகியல் பலன்களைத் தராது என்றும் கருதும் ஒரு போக்கு நம்மிடையே இருக்கிறது. அந்தப் போக்கு சரியானதல்ல.

நமது ஆன்மீகம் ஆகக் கடினமான வீடு பேற்றையே தருமானால் உலகியல் நலங்களை அது ஏன் தராது? இந்த உலகச் செல்வங்களையும் அது அளிக்கும் என உறுதி கூறுகிறான் கண்ணபிரான்.

ஐந்து கோடி ரூபாய்க்கு நாம் ஒரு வீடு வாங்க முடியும் என்றால் அதன் அருகே உள்ள பெட்டிக்கடையில் ஐந்து ரூபாய்க்கு நம்மால் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்க முடியாதா? வீடு பேற்றையே தரவல்லது நம் ஆன்மிகம் என்றால் சாதாரண உலகியல் செல்வங்களை அது ஏன் தராது?

`நமது பிரியமானவர்களை இழப்பதில் எப்போதும் சற்று வலி இருக்கத்தான் இருக்கும். ஞானமுடையோர் அந்த வலியைப் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் கடந்து செல்வர். அந்த வலி தாங்கள் ஏற்றிருக்கும் பொறுப்புகளைப் பாழாக்காதவாறு பார்த்துக் கொள்வர்!` எனக் கிருஷ்ணர் சொல்லும் உபதேசத்தை நாம் பின்பற்றினால் எந்தக் கடும் சோகத்திலும் நம் கடமையிலிருந்து தவறுவோமா?

பகவத் கீதை உளவியல் ரீதியாகப் பல அருமையான கருத்துகளைச் சொல்கிறது. `கருமத்தைச் செய், பலனில் பற்று வைக்காதே!` என்பது கீதையின் உபதேசங்களில் மிகவும் முக்கியமானது.
பகவத் கீதை வாழ்க்கையை வருகிறபடி ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.

`எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப் பட்டது. எது இன்று உன்னுடையதாக இருக்கிறதோ அது நாளை இன்னொருவருடையதாகும். இதுவே உலக நியதி. இதுவே படைப்பின் சாரம். இதை உணர்ந்து அமைதி கொள்` என அர்ச்சுனனுக்கு எடுத்துக் கூறுகிறான் கண்ணன்.

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட பகவத் கீதை, தமிழ் உள்பட எல்லா இந்திய மொழிகளிலும் பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கீதையின் உள்ளடக்கத்தைப் பயின்று அது சொல்லும் தத்துவங்களை வாழ்வில் பின்பற்றினால் சாந்தியும் நிம்மதியும் அடையலாம்.
Tags:    

Similar News