செய்திகள்

குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி - தினகரன்

Published On 2018-08-03 07:15 GMT   |   Update On 2018-08-03 07:15 GMT
குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #EdappadiPalaniswami

கரூர்:

கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

அ.தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சிதான் அ.ம.மு.க., அம்மாவின் உண்மையான கட்சி என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது ஒரு கோடிக்கும் மேலாக உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 2 கோடியை எட்டி விடுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் உணர்வில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. சிலர் தொடர்பிலேயே இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

வால்டர் தேவாரம், ஐ.ஜி.அருள் ஆகியோர் மாதிரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேர்மையானவர், நடுநிலையானவர். யாரையோ காப்பாற்ற எதையோ மறைக்க, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு உதவியாக சி.பி.ஐ. செயல் படுவதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாண்பை மறந்து பேசி கொண்டிருக்கிறார். நாலாந்திர அரசியல்வாதி போன்று இருக்கும் அவரது செயல்பாட்டினால் தமிழக மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எதிர் கட்சி தலைவர்களையும் ஒருமையில் பேசி வருகிறார். ஆசிரியர்களுக்கு ஏதோ இவர் சம்பளம் வழங்குவது போன்று பேசுகிறார். குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பின்னர் மக்களாட்சி வரும்.

 


அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை வைத்து சிலை கடத்தல் வழக்கு விசாரிக்கப்படும். அ.தி.மு.க.வின் செல்வாக்கு தமிழகத்தில் எங்கும் உயரவில்லை. பாகிஸ்தானில் வேண்டு மென்றால் உயர்ந்திருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆர்.கே.நகர் தேர்தலை போன்று 50ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

இந்த ஆட்சியில் சாலை, பாலம் அமைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்திகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் அர்வம் காட்டுகின்றனர். அமைச்சர்கள் என்ன பேச வேண்டும்என்று தெரியாமலேயே பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News