செய்திகள்

ராம மோகனராவ் நக்சலைட் போல பேசுகிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2016-12-28 11:20 GMT   |   Update On 2016-12-28 11:20 GMT
அதிகாரி என்பதை மறந்து ராம மோகனராவ் நக்சலைட் போல பேசுகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் 4 வழிச்சாலை முடியும் இடத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதற்கான இடத்தை இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் நேற்று அளித்த பேட்டியில் தான் ஒரு அதிகாரி என்பதை மறந்து நக்சலைட் போல பேசியுள்ளார். இவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறையினர் நிரூப்பிப்பார்கள்.

சோதனை நடந்த மறுநாள் முதல் 4 நாட்கள் இவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட்டார். அப்போது இது பற்றி எதுவும் வாய்திறக்காத ராமமோகனராவ், இப்போது பேசுகிறார் என்றால், அவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளது.

ராமமோகனராவுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும். இது போல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மீது சாதாரண மக்களுக்கு அளிக்கும் தண்டனையை காட்டிலும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களையும் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

ராமமோகனராவின் இத்தகைய நடவடிக்கைக்காக அவரை டிஸ்மிஸ் செய்வதும் தவறாகாது.

காங்கிரசார் ஊழலை ஒழிக்க வேண்டும், லஞ்சத்தை தடுக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் ஊழலுக்கு துணை போனவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்களை ஆதரித்தும் பேசி வருகிறார்கள்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா 3-வது அணி என்ற நிலை மாறி முதல் அணி என்ற நிலையை அடையும். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அந்த அளவுக்கு தமிழக மக்கள் மத்தியில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. அனைத்து கட்சி குழுவினர் அவர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறுவதை ஏற்க தேவையில்லை.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திருவள்ளூர் பகுதியில் தாசில்தார் மற்றும் வருவாய் அதிகாரிகள் செல்ல முடியாத இடத்துக்கு கூட சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார். அங்குள்ள மக்களுக்கும் ஆறுதல் கூறி உள்ளார். அவர் திறமையாக செயல்படுகிறார். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ராம மோகனராவ் கூறிய புகார்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும். அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நீதிமன்றத்தில் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News