லைஃப்ஸ்டைல்

ஸ்மார்ட்போனில் ஆவணங்களை பாதுகாக்கும் வழிமுறை

Published On 2018-01-09 03:08 GMT   |   Update On 2018-01-09 03:08 GMT
பெண்களே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களைப் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பாதுகாக்கலாம்.
ஸ்மார்ட்போன் தான் உலகம் என்றாகிவிட்ட அளவுக்கு நவீன வசதிகள் செல்போனுக்குள் வந்துவிட்டன. அதனால் கம்யூட்டரின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. ஆவணங்கள், கோப்புகள், படங்கள் என எல்லாவற்றையும் செல்போனுக்குள்ளேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதை எங்கு சென்றாலும் நாம் கூடவே எடுத்துச் செல்ல முடியும். அப்படிப்பட்ட தகவல் பெட்டகத்தில் உள்ள முக்கிய தகவல்களை வேறு யாரேனும் பார்த்துவிட்டால் சிக்கலாகிவிடும். அப்படி எதுவும் நடக்காமல் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களைப் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பாதுகாக்கலாம்.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் செய்யும் தவறு, ஸ்மார்ட்போன் மூலம் இ-மெயில் பார்ப்பது, இன்டர்நெட் பேங்கிங் உபயோகிப்பது போன்றவற்றைச் செய்துவிட்டு, பாஸ்வேர்டை நினைவில் கொள் என கொடுத்து வைத்துவிடுவது. கூடுமானவரையிலும் பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் போன்ற முக்கியமான தகவல்களை இப்படி சேமிப்பதை தவிர்ப்பது நல்லது. 

ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை மட்டும் பூட்டி வைத்துக் கொள்ளும் ‘ஆப் லாக்‘ அப்ளிகேஷன்கள் நிறைய உள்ளன. பேங்கிங் அப்ளிகேஷன் போன்றவற்றை இதன்மூலம் சேமித்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் ஸ்மார்ட்போன் தவறான ஆட்களிடம் சிக்கினால் கூட முக்கியமான தகவல்களை கசியவிடாமல் பார்த்துக் கொள்ளமுடியும். 



ஸ்மார்ட்போனில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனீட்டாளர் கணக்குகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும் வசதி உண்டு. அவற்றைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர் கணக்குகளை உருவாக்கி வைத்துக் கொண்டால், முக்கியத் தகவல்களைப் பயன்படுத்தும்போது மற்றொரு பயனீட்டாளர் அக்கவுண்டில் இருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் உங்களுடைய தகவல்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடியும்.

என்னதான் உங்கள் ஸ்மார்ட்போன் அதிக கட்டமைப்புடன் இருந்தாலும் ஒரே ஒருமுறை வேகமாக கீழே போட்டால் போதும், உங்கள் மொத்த தகவல்களும், போட்டோ, வீடியோ போன்ற முக்கிய ஆவணங்களும் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் அவ்வப்போது டேட்டா பேக் அப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

இப்போது ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் போன்ற பொது இடங்களில் வைபை வசதி வந்துவிட்டது. இந்த வைபை வசதிகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் எனப்படும் தகவல் திருடர்கள் உலா வருகிறார்கள். நீங்கள் இணையத்தில் என்னென்ன செய்கிறீர்கள் என அத்தனை விவரங்களையும் திருடிவிட முடியும். எனவே பொது இடங்களில் உள்ள வைபையைப் பயன்படுத்தும்போது, கவனமாக இருப்பது நல்லது.

Tags:    

Similar News