லைஃப்ஸ்டைல்

தற்கொலைகளை தகர்த்திடுவோம்

Published On 2017-10-09 04:58 GMT   |   Update On 2017-10-09 04:58 GMT
எதுவுமே நிலையில்லாத இவ்வுலகில் உங்கள் துன்பங்கள் மட்டும் எப்படி நிலையாகும் என்பதில் நிலையாக இருப்போம். தற்கொலைகளை தகர்த்திடுவோம்.
தற்கொலை என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால் அது பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான வழி என கருதி சிலர் தற்கொலை செய்கின்றனர். அது நம்மவர்களுக்கு பிரச்சினையையும், அவமானத்தையும், சுமையையும் கொடுத்துவிடும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.

பொதுவாக மக்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சூழ்நிலை கைதியாக மாறி இந்த முடிவை எடுக்கின்றனர். கடன் தொல்லை, கணவன்- மனைவி பிரச்சினை, தொழில்ரீதியான நஷ்டம், இலக்குகளில் தோல்வி, காதல் தோல்வி, உடல்நல பிரச்சினைகள் போன்றவைகள் தற்கொலைக்கு பெரும்பான்மையான காரணமாக உள்ளன. முதலில் வறுமையும், இழப்பும் நம் குற்றமல்ல என்பதை உணருங்கள்.

துன்பங்களை கண்டு நாம் அஞ்சாவிடில் துன்பங்கள் நம்மை கண்டு அஞ்சும் நிலை ஏற்படும் என நினைவில் கொள்ளுங்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் மனதினை மாற்றிக்கொள்ளும் இயல்பை மேம்படுத்தி கொள்ளுங்கள். ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதால் முடிந்தவரையில் ஆசைகளை குறைத்து கொள்ளுங்கள்.

நமக்கு பின்னால் நம்மைப்பற்றி பேசும் கேலி பேச்சுக்களையும், குற்றச்சாட்டுகளையும், நமது முன்னேற்றத்துக்கான தூண்டுதலாக எண்ணுங்கள். இது போன்று நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றும் இயல்பை வளர்த்து கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு பிரச்சினையின் போதும், நம் மீது என்ன தவறு என உணர முயற்சியுங்கள். வன்முறையை கைவிடுங்கள்.



துன்பங்கள் என்பவை அனுபவங்களை நமக்கு தரக்கூடியது. பிறர் சொல்லி கேட்டு நடப்பதை காட்டிலும், அனுபவமே சிறந்த ஆசானாக கருதப்படுகிறது. துன்பங்களில் காணும் இன்பமே புதுமை தரக்கூடியது. மேலும் துன்பங்கள் இல்லாமல் வரும் இன்பம் நேர்மையான வழியில் வருவது அல்ல. அது கட்டாயமாக நிலையானதும் அல்ல. இயற்கையும் கூட இந்த உலக நியதியை உணர்த்துகிறது. வசந்த காலத்தில் வரும் பசும்தளிர்களுக்கு முன்பு உள்ள வெறுமையான மரத்தினை போல நம் வாழ்விலும் துன்பங்களுக்கு பிறகு வரும் இன்பம் தான் ரசனைக்குரியதாக மாறும்.

முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். எதனையும் நம்மவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் மன அழுத்தமே ஆகும். அதாவது இந்நிகழ்விற்கு பிறகு நம்மைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்பதே ஆகும். இந்த மனநிலையை அடியோடு அழித்திடுங்கள்.

அதற்கு பதிலாக அவர்கள் முன்னால் இனி எப்படி முன்னுதாரணமாக வாழ்ந்து, நம்மை பற்றிய மனநிலையை மாற்றுவது என சிந்தியுங்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சமூகத்தில் இயற்கைக்கு மாறாக நம்மை சார்ந்தோரை பிரிந்து செல்லுதல், மாபெரும் வலியை ஏற்படுத்தி விடும் என மறந்து விடாதீர்கள். எதுவுமே நிலையில்லாத இவ்வுலகில் உங்கள் துன்பங்கள் மட்டும் எப்படி நிலையாகும் என்பதில் நிலையாக இருப்போம். தற்கொலைகளை தகர்த்திடுவோம்.
Tags:    

Similar News