லைஃப்ஸ்டைல்

பட்டா தொலைந்து போனால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

Published On 2017-09-04 04:44 GMT   |   Update On 2017-09-04 04:44 GMT
எதிர்பாராவிதமாக, பட்டா தொலைந்துவிடும் பட்சத்தில், என்ன செய்யவேண்டும் என்பதற்கான தகவல்களை இங்கே காணலாம்.
குறிப்பிட்ட நிலம், வீடு அல்லது வீட்டுமனை ஒருவருக்கு சொந்தம் என்பதற்கு அரசின் ஆவணமாக இருப்பது பட்டா ஆகும். கடந்த காலங்களில் பட்டாவின் முக்கியத்துவம் பற்றி அதிகம் அறியப்படாமல் இருந்தது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நிலங்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக, பல்வேறு இடங்களில் நில உரிமையாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. இப்போது, குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டுக்கு பட்டா என்பது மிக முக்கியம் என்பதோடு வங்கி கடன் உள்ளிட்ட இதர காரணங்களுக்காகவும் பட்டா அவசியமானதாக உள்ளது.

எதிர்பாராவிதமாக, பட்டா தொலைந்துவிடும் பட்சத்தில், என்ன செய்யவேண்டும் என்பதற்கான தகவல்களை இங்கே காணலாம். கீழ்க்கண்ட தகவல்களின்படி, மீண்டும் விண்ணப்பம் செய்து ‘டூப்ளிகேட்’ என்ற நகல் பட்டாவை பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும்.

* நகல் பட்டா பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை முதலில் அணுகவேண்டும். பட்டா காணாமல்போன விபரங்களை தெரிவித்து, நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தை அலுவலகத்தில் அளிக்கவேண்டும்.

* மேலும், காணாமல்போன பழைய பட்டாவின் ஜெராக்ஸ் நகல் அல்லது பட்டா எண் உள்ளிட்ட இதர விவரங்களை தருவது வேலையை எளிதாக்கும்.

* குறிப்பிட்ட வங்கியின் மூலம் நகல் பட்டா பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

* தாசில்தார் அலுவலகத்தில், நகல் பட்டாவுக்கான விண்ணப்பத்தை அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களது விசாரணைக்கு பிறகு மனு மீது ஒப்புதல் பெறவேண்டும்.

* மேற்கண்ட விசாரணையின் அடிப்படையில் நகல் பட்டாவானது அலுவலக நடைமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்.
Tags:    

Similar News