லைஃப்ஸ்டைல்

கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை

Published On 2017-07-17 04:07 GMT   |   Update On 2017-07-17 04:07 GMT
எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை. எதற்கும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும்.
கவலைகள் மனதை காயப்படுத்தும் கொடிய நோய். கவலைகள் இல்லாத மனிதர்களை காண்பது அரிது. ஆனால் நிறைய பேர் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப்பட்டு மனதை வருத்திக்கொண்டிருப்பார்கள். கவலைகள் இரண்டு வகையில் மனதை உலுக்கும். நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவது ஒரு வகை. ஒருசிலர் செய்த தவறை நினைத்து பார்த்து மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

அவசரப்பட்டு செயல்பட்டு விட்டேனே என்று நடந்த சம்பவத்தையே திரும்ப, திரும்ப நினைத்து பார்த்து கொண்டிருப்பார்கள். ‘அப்படி செய்திருக்கலாமோ? இப்படி செய்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது’ என்று மனத்திரையில் நடந்த சம்பவத்தை ஓடவிட்டு பார்த்து புலம்பிக்கொண்டிருப்பார்கள். நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதை திடப்படுத்தி கவலையில் இருந்து மீண்டு வந்துவிட வேண்டும்.



இரண்டாது வகை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவது. அதில் தவறில்லை. எதிர்காலம் பற்றிய கவலை சிறிதேனும் இருந்தால்தான் எப்படி முன்னேற முடியும், எந்த அளவுக்கு உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். அத்தகைய கவலையோடு களம் இறங்கினால்தான் முன்னேற்றத்தை நோக்கி நகர முடியும். அதற்காக எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை. தேவையற்ற கவலைகள் நிம்மதியை சீர்குலைத்துவிடும். மன தைரியத்தை வலுவிழக்க செய்துவிடும். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும்.

எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ என்று கவலையிலேயே உழன்று கொண்டிருந்தால் நிகழ்காலம் நிம்மதியின்றி போய்விடும். எப்போதும் எதிர் காலம் பற்றிய அச்ச உணர்வே பின்தொடர்ந்து கொண்டிருக்கும். நடந்ததையே நினைத்து பார்த்தோ, எதிர்காலத்தை பற்றியோ கவலைப் படுவதினால் எதுவும் நடக்கப் போவதில்லை. எதற்கும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும்.

Tags:    

Similar News