லைஃப்ஸ்டைல்

முகப்பரு சிகிச்சையில் செய்யும் தவறுகள்

Published On 2018-01-26 08:24 GMT   |   Update On 2018-01-26 08:24 GMT
முகப்பருவைப் போக்க சிறந்த சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், சிகிச்சைகளில் நடக்கும் சில பொதுவான தவறுகளால் முகப்பருப் பிரச்சனை இன்னும் மோசமாகவும் வாய்ப்புள்ளது.
இன்று முகப்பரு என்பது பலருக்கும் காணப்படும் ஒரு சருமப் பிரச்சனையாக உள்ளது. முகப்பருவைப் போக்க பல்வேறு சிகிச்சைகள் உள்ளன, சிறந்த சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், சிகிச்சைகளில் நடக்கும் சில பொதுவான தவறுகளால் முகப்பருப் பிரச்சனை இன்னும் மோசமாகவும் வாய்ப்புள்ளது. 

முகப்பருவுக்கான சிகிச்சை என்பது நீண்ட கால செயலாகும். முகப்பருக்கள் வேகமாக வந்துவிடும், ஆனால் சரியாக அதிக காலம் எடுக்கும். மருந்துகளின் விளைவு சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்த 4 முதல் 6 வாரங்கள் கூட ஆகலாம். புதிய மருந்துகள் மற்றும் லோஷன்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள சருமத்திற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், சிகிச்சை முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.       

முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், மிக அதிக தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படிச் செய்தால் பலன் எதுவும் கிடைக்காது. ஒரே தயாரிப்பை குறிப்பிட்ட காலம் வரை தவறாமல் பயன்படுத்த வேண்டும். 



பலர் சருமத்தில் உள்ள அழுக்கினால் தான் முகப்பரு வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் சருமத்தை அளவுக்கு அதிகமாகத் தேய்த்து, சுரண்டி சுத்தப்படுத்துவார்கள். இதனால் சருமம் எரிச்சல் அடைந்து முகப்பருவும் அதிகமாகலாம். நாளொன்றுக்கு இருமுறை சருமத்தைக் கழுவினால் போதும், அப்போதும் லேசாகக் கழுவ வேண்டும். எரிச்சலை ஏற்படுத்தாத, pH சமநிலை கொண்ட க்ளென்சரைப் பயன்படுத்த வேண்டும். வெந்நீரும் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். எப்போதும் சருமத்தைக் கழுவ வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும். 

முகப்பருப் பிரச்சனை உள்ளவர்கள், எப்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொட்டுக்கொண்டே இருப்பார்கள். முகப்பருவை உடைக்க முயற்சிப்பது அதைவிடப் பெரிய தவறு. முகப்பருக்களைத் தொடுவதும், உடைப்பதும் இன்னும் மோசமாக்கும். அப்படிச் செய்வதால் பாக்டீரியா இன்னும் அதிகமாகப் பரவி காயம் இன்னும் மோசமாகும். இதனால் தழும்புகளும் உண்டாகலாம்.

பலர் சருமம் முகப்பருக்கள் நீங்கி சரியானதும் சிகிச்சையை முடித்துக்கொள்வார்கள். முகப்பரு சிகிச்சை என்பது ஒரு நீண்ட கால செயல்முறை அவர்கள் மறந்துவிடுகின்றனர். இது சிகிச்சையின் கடைசி கட்டம் தான். நல்ல பலன்கள் கிடைக்க வேண்டுமெனில், பரிந்துரைக்கப்பட்ட சரியான கால அளவு வரை சிகிச்சையை விடாமல் தொடர வேண்டும். மருத்துவர் இடையில் நிறுத்தக் கூறினால் மட்டுமே நிறுத்தலாம்.
Tags:    

Similar News