லைஃப்ஸ்டைல்

முகத்திற்கு ஏற்ற நகையை தேர்வு செய்வது எப்படி?

Published On 2018-01-20 06:04 GMT   |   Update On 2018-01-20 06:04 GMT
பெண்கள் ஆபரணங்கள் தேர்வு செய்யும் போது முக வடிவத்திற்கு பொருத்தமான ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிவது கூடுதல் அழகு சேர்க்கும்.
பெண்கள் ஆபரணங்கள் வாங்க செல்வதற்கு முன்பாக தங்கள் முக அமைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். முக வடிவத்திற்கு பொருத்தமான ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிவது கூடுதல் அழகு சேர்க்கும். வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள் கழுத்தையொட்டி ஆபரணங்கள் அணிவதை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். 

அவர்களுக்கு நீளமான ஆபரணங்கள்தான் எடுப்பாக இருக்கும். நீளமான ஆபரணங்களும் வளைவுகள் இல்லாமல் நேராக இருப்பது கூடுதல் அழகு சேர்க்கும். அவர்கள் வட்ட வடிவத்திலான ஆபரணங்களையும் தவிர்க்க வேண்டும். கற்கள் பதித்த வட்டமான ஆபரணங்களும் அவர்களது முக அழகுக்கு வசீகரம் சேர்க்காது. காதுகளில் நீளமாக தொங்கும் ஆபரணங்களை அவர்கள் தேர்ந் தெடுத்து அணியலாம்.



நீள்வட்ட முக அமைப்பை கொண்டவர்கள் பலவிதமான ஆபரணங்களை அணிந்து மகிழலாம். கழுத்தையொட்டியோ அல்லது நீளமாகவோ நெக்லஸ் அணியலாம். வித்தியாசமான காதணிகளையும் பயன்படுத்தலாம். பெரிய வளையங்கள் மற்றும் தொங்கும் ஆபரணங்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். 

செவ்வக வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் கழுத்தையொட்டிய ஆபரணங்கள் அணிவதுதான் பார்க்க அழகாக இருக்கும். இதய வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் அதிக நீளமில்லாத குட்டையான நெக்லஸ் அணியலாம். முக்கோண வடிவத்திலான காதணிகளை தேர்ந்தெடுப் பதும் அவர்களது முகத்திற்கு அழகு சேர்க்கும்.
Tags:    

Similar News