லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான டிரை ஃப்ரூட் மோதகம்

Published On 2017-09-08 07:30 GMT   |   Update On 2017-09-08 07:31 GMT
தேங்காய், பருப்பு பூர்ணம் வைத்து செய்த கொழுக்கட்டை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று டிரை ஃப்ரூட் வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெளிப்புறத்திற்கு

அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1½ கப்
உப்பு - ¼ தேக்கரண்டி
எண்ணெய் - சில துளிகள்

பூரணத்திற்கு

கோவா - 100 கிராம்
பாதாம் - ¼ கப் நறுக்கியது
முந்திரி - 15 நறுக்கியது
பிஸ்தா - 15 பொடித்தது
கசகசா - 1 தேக்கரண்டி
பேரிச்சம் பழம் - 15 நறுக்கியது
உலர்ந்த திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - ¼ கப்
சர்க்கரை - ¼ கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்



செய்முறை :

தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்க விட்டு அதில் உப்பு மற்றும் சில துளி எண்ணெயை சேர்க்கவும். பிறகு அடுப்பை குறைத்து விட்டு அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மாவை வேறொரு தட்டிற்கு மாற்றி ஆறியவுடன் லேசாக பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது நெய்யை ஊற்றி அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை மற்றும் பேரிச்சம் பழத்தை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

அதே கடாயில் மீதி நெய்யை ஊற்றி அதில் கசகசாவை போட்டு பொரிந்ததும் அதை எடுத்து விட்டு கோவாவை கடாயில் போடவும். கோவா உருகியதும் அதில் சர்க்கரையை சேர்த்து அக்கலவை கொதிக்கும்போது அதில் துருவிய தேங்காயை சேர்க்கவும். அத்துடன் வறுத்து வைத்த பாதாம் போன்றவைகளையும், கசகசாவையும் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். இக்கலவை கெட்டியாகி ஆறும் வரையில் வைக்கவும்.

மோதகம் செய்யும் அச்சில் சிறிதளவு எண்ணெய் தடவி அரிசி மாவை உருண்டையாக்கி அச்சில் வைத்து எல்லாப்புறமும் அழுத்தி விடவும்.

இப்பொழுது நடுவில் ஒரு பள்ளம் ஏற்படும். அந்த பள்ளத்தில் ட்ரை ஃப்ரூட் பூரணத்தை 1 தேக்கரண்டி வைத்த அச்சை அழுத்தி மூடி பின்பு திறந்து மோதகத்தை வெளியில் எடுத்து வைக்கவும்.

இட்லி பானை அல்லது இட்லி குக்கரில் அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்துள்ள மோதகத்தை வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

இந்த மோதகம் வித்தியாசமான சுவையுடன், லேசான இனிப்புடன் இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News