லைஃப்ஸ்டைல்
வாய் மணக்க.. வாசனை வீச..

வாய் மணக்க.. வாசனை வீச..

Published On 2020-02-02 03:45 GMT   |   Update On 2020-02-01 04:21 GMT
மற்றவர்களிடம் பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நெருங்கி பழகுபவர்கள் கூட விலகி செல்லும் நிலை ஏற்படக்கூடும்.
நிறைய பேர் வாய் துர்நாற்ற பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். மற்றவர்களிடம் பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நெருங்கி பழகுபவர்கள் கூட விலகி செல்லும் நிலை ஏற்படக்கூடும். அந்த நாற்றத்தை போக்குவதற்கு மவுத்வாஷ்கள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள் காலப்போக்கில் பற்சிதைவை உருவாக்கக்கூடும்.

துர்நாற்றத்துக்கு காரணமான கிருமிகளை இயற்கை முறையிலேயே அழித்து வாய் சுகாதாரத்தை பேணலாம். பெருஞ்சீரகம், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டது. ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும் என்பது வாய்வழி சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

பேக்கிங் சோடாவும் துர்நாற்றத்திற்கு சிறந்த நிவாரணியாகும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து வாய் கொப்பளித்து வரலாம். பல் துலக்கியபிறகும் பயன்படுத்தலாம். எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் உமிழ் நீர் சுரப்பை தூண்ட உதவும். அது வாய் துர்நாற்றத்தை குறைப்பதற்கு வழிவகுக்கும். ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளித்து வரலாம். அது வாய்க்கு புத்துணர்வு கொடுக்கும். துர்நாற்றத்தை போக்க உதவும்.

லவங்கப்பட்டையும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும். சிறிதளவு லவங்கப்பட்டை தூளை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வரலாம். அதனுடன் ஏலக்காயையும் சேர்த்துக்கொள்ளலாம். விரைவாக நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகரும் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து வாய் கொப்பளித்து வரலாம்.
Tags:    

Similar News