லைஃப்ஸ்டைல்

இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்

Published On 2017-11-12 07:43 GMT   |   Update On 2017-11-12 07:43 GMT
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, பிற்பகல்தான் அதற்கு ஏற்ற நேரமாம்.

பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம் நீடித்த தன்மையுடனும், வலிமையாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவைசிகிச்சை பாதுகாப்பானது. உடலின் உயிரோட்ட நேரச் சுழற்சியே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரவில் நமக்குத் தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிர்கேடியன் ரிதமே காரணம். ஆனால், நமது உடல் அசைவுகள் செயல்படும் விதத்தில் அது பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யும் வல்லமை கொண்டுள்ளது.


பிற்பகலில் சிர்கேடியன் ரிதமும் இதயத் துடிப்பும் இசைவாக அமைவதால், காலைப் பொழுதைவிட, பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்படுகிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் பார்ட் ஸ்டேல்ஸ் கூறுகையில், ‘அறுவைசிகிச்சை செய்துகொள்வதில் இருந்து மக்களை அச்சுறுத்த நாங்கள் விரும்பவில்லை. உயிரைக் காக்கும் நோக்கத்தில் இதைத் தெரிவிக்கிறோம்’ என்றார்.

‘மதிய உணவுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வது மருத்துவமனைகளுக்கு முடியாமல் போகலாம். ஆனால், அதிக பாதிப்புகள் நிறைந்த நோயாளிகளை நம்மால் கண்டறிய முடியும் என்றால், பிற்பகலில் அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய வலியுறுத்துவதால் அவர்கள் நிச்சயம் பலன் பெறுவர்’ என்கிறார்.

காலைப்பொழுதில் இதய வலி அல்லது மாரடைப்பு அதிகமாக நிகழக்கூடியது. அதேவேளை இதயத்துடிப்பும் நுரையீரல் செயல்பாடும் பிற்பகலில் மிகத் தீவிரமாக இருக்கும்.

மூலக்கூற்று உயிரியலுக்கான இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவர் ஜான் ஓ நீல் கூறுகையில், ‘அறிவியல்ரீதியாக இது பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், உடலில் உள்ள மற்ற அணுக்களைப் போல, சிர்கேடியன் ரிதமும் இதயத்துடிப்பின் செயல்பாட்டுக்குத் தக்கபடி இயங்குகிறது’ என்கிறார்.

‘நமது ரத்த நாடி முறை, நண்பகல், பிற்பகலுக்குப் பிந்தைய செயல்பாட்டில் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது. தொழில்முறை தடகள வீரர்கள் வழக்கமாக தங்களின் சாதனைகளுக்கான முயற்சியை பிற்பகல் வேளையிலேயே மேற்கொண்டு சிறந்த செயல்திறனை நிரூபிக்கின்றனர்’ என்று எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

‘பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்வது நல்லது என்று கூறுவதற்கு மற்றொரு காரணம், அறுவைசிகிச்சை நிபுணர்கள் காலைப் பொழுதில் தங்களின் சொந்த உடல் கடிகாரத்தின் செயல்திறன் அல்லது அறுவைசிகிச்சைக்கான திறன் குறைவாக இருப்பதால் சோர்வுடன் இருக்கலாம்’ என்று அவர் விளக்குகிறார்.

இதயத் திசுவின் மாதிரிகளை நோயாளிகளிடம் இருந்து பெற்று பிரெஞ்சு குழு நடத்திய சோதனை, பிற்பகல் பொழுதில் மிகவும் சரியான வகையில் இதயம் துடிப்பதாகக் கூறுகிறது.

ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டேல்ஸ் கூறும்போது, ‘காலையில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள் அதிக அளவிலான சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளதாக நம்புகிறோம். ஆனால் இதுதொடர்பாக மேலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்’ என்று கூறுகிறார்.

பிறவகை அறுவைசிகிச்சைகளிலும் இந்த சிர்கேடியன் ரிதம் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News