லைஃப்ஸ்டைல்

ஆமணக்கு எண்ணெயின் மருத்துவ குணங்கள்

Published On 2017-08-22 02:56 GMT   |   Update On 2017-08-22 02:56 GMT
60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மட்டும்தான் பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன.
ஆமணக்கு வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது பயிரிடப்படுகிறது. ஆமணக்கில் 16 வகைகள் இருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு, காட்டாமணக்கு ஆகிய 4 ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இவைதான், மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளன. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு, வேறு வகை.

சிற்றாமணக்கின் விதைகள் சிறியதாக இருக்கும். மற்றவை அவற்றைவிட சற்றுப் பெரிதாக இருக்கும், செவ்வாமணக்கு சிவப்பு நிறத் தண்டுகளைக் கொண்டது, மற்றவகையில் இது ஆமணக்கை ஒத்தே இருக்கும். உள் மருந்துகளுக்குச் சிற்றாமணக்கு எண்ணெய், வெளிப்பூச்சு மருந்துகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மட்டும்தான் பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. மேல்தட்டு மக்கள் மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்துள்ளனர். உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே.

வயல்வெளி, ஆறு, வாய்க்கால் மற்றும் ஏரிக்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்குச் செடிகளிலிருந்து விதைகளை மக்களே சேகரித்து, அவர்களின் வீட்டு அடுப்பங்கரையிலேயே எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தவிர வயிறு, குடல், கர்ப்பப்பை நோய்களுக்கும் ஆரம்பக்கட்ட மருந்தாக இதனை பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது. அதனால், இரவு நேரங்களில் விளக்கெரிக்க இதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான், ஆமணக்கெண்ணெய், ‘விளக்கெண்ணெய்’ என ஆனது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள், இன்றும் இதை ‘கொட்டைமுத்து எண்ணெய்’ என்றே சொல்கிறார்கள்.



சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன. ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஆமணக்கு விதைகளை எந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊறின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.

பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளி எண்ணெய்யை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. காய்ச்சிய எண்ணெய்யில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது.

இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. காய்ச்சிய எண்ணெய்யுடன் கால் பங்கு எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்‘ என்று பெயர். இது எல்லாச் சித்த மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பெண்களின் சுகப்பிரசவத்திற்கு இந்த எண்ணெய் பெரிதும் பயன்பாடுடையது. இது போன்று எண்ணற்ற சிறப்பான மருத்துவ குணங்கள் விளக்கெண்ணெய்க்கு இருக்கிறது. -
Tags:    

Similar News