லைஃப்ஸ்டைல்

உணவுப்பாதை சில உண்மைகள்

Published On 2017-07-04 03:09 GMT   |   Update On 2017-07-04 03:10 GMT
உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது.
உணவை நன்கு மென்று விழுங்குங்கள். ‘நொறுங்க தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள். எல்லாம் தெரியும். ஆனால் இன்று  வரை செய்யவில்லை என்கின்றீர்களா! பரவாயில்லை. இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள். நன்கு மென்று விழுங்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது ஜீரணத்திற்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ளவும் உதவும். நன்கு உணவை மெல்லுவது வயிற்றில் உணவினை அமிலத்தோடு கலந்து கலோரிகளை எரிக்க உதவும்.

உணவு செரிமானம் வாயில் உணவினை நன்கு மெல்வதில் ஆரம்பித்தாலும் சிறு குடலிலேயே மிக அதிக அளவு செரிமானம் நிகழ்கின்றது. நன்கு அரைத்து கூழான உணவு சிறு குடலில் என்சைம்கள், பைல் உப்புகளால் முழுமையாக செரிக்கப்படுகின்றது.

குறைந்த அளவு உணவு உண்டால் வயிறு சிறிதாகாது. அதன் அளவு அப்படியேத்தான் இருக்கும். வயிற்றினை சுருக்க இன்று அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. குறைந்த அளவு உணவு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பினை குறைக்கும். இது போலத்தான் வயிற்றுக்கான உடல் பயிற்சி வயிற்றிலுள்ள வயிறு உறுப்பினை குறைக்காது. வயிற்று தசைகளை இறுக்கி கொழுப்பினை கரைக்கும்.

உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது. எனவே உணவுப் பாதை நோய்கள் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய ஆரோக்கியம். உணவுப் பாதை என்பது வாயில் ஆரம்பித்து உணவுக் குழல், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என செல்கின்றது. இதில் கணையம், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் இவையும் அடங்கும்.



இஞ்சியின் மருத்துவ குணங்களை அறியாதவர் இல்லை. தினமும் 1-3 கிராம் வரை இஞ்சியினை அன்றாட உணவில் அவசியம் பயன்படுத்துங்கள். 3 கிராமுக்கு மேல் வேண்டாம். ஒவ்வாமை என்கின்றார்கள்.

தானியங்களில் குறிப்பாக கோதுமையில் இருவித புரதம் சேர்ந்து இருப்பது அந்த தானிய மாவினை எலாஸ்டிக் போல் சுழற்றி வைக்கும். கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்றவைகளில் காணப்படுகிறது. இது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜி கொடுக்கலாம். இதனை அறிய தனி பரிசோதனை என உணவுப் பாதை நிபுணர்கள் செய்வார்கள். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் பரிசோதனை மேற்கொண்டு நிவர்த்தி பெறுவது நல்லது.

* மேற்கூறிய உணவு வகைகளை உட்கொள்ளும் பொழுது தாங்க முடியாத தலைவலி ஏற்படுகிறது. இவ்வுணவுகளை தவிர்க்கும் பொழுது தலைவலியும் வெகுவாய் குறையும்.

* எரிச்சல், சரிவரி யோசிக்க முடியாமை.
* எதிர்பாரா திடீர் எடைகுறைவு அல்லது காரணமின்றி எடை கூடுதல்
* பல் சொத்தை, வாய்புண் இவை அடிக்கடி ஏற்படுதல்.
* அரிப்பு, சரும சிவப்பு, தடிப்பு, கொப்பளங்கள் இவைகள் இருந்தால் உடனடியாக உணவு பாதை நிபுணரை உங்கள் குடும்ப மருத்துவர் மூலமாக அணுகவும்.
சில அறிகுறிகளை நம் உடம்பு வாகு என அப்படியே விட்டு விடுகின்றோம். இதனால் பல தொல்லைகளை அனுபவிக்கின்றோம்.

சிறு குடலில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கும் பொழுது:-

* திடீரென வயிறு உப்பிசம் ஏற்பட்டு விடும். இது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகவும் இருக்கலாம்.
* இதனைத் தொடர்ந்து சிலருக்கு பலகாலம் வயிற்றுப் போக்கு இருக்கலாம்.
* வயிற்று வலி இருக்கலாம்.
* மலச்சிக்கல் இருக்கலாம்.
* காற்று இருக்கலாம்.



இதனை சாதாரணமாக ஒதுக்கி விடாக்கூடாது மருத்துவ உதவி பெறுங்கள்:

செரிமானத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்
* துரித நடை தினமும் 20 - 30 நிமிடங்கள் வரை
* சைக்கிள் விடுவது 15 நிமிடங்கள் வரை
* வயிற்றுப் பயிற்சிகள் செய்வது.
* நீச்சல்
* ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி
* யோகா
* டென்னிஸ் போன்ற விளையாட்டு
இவை உங்கள் செரிமானத்தினை சீராக வைக்க உதவும்.

கல்லீரல்:

உங்கள் உடலினை நச்சுக்களிலிருந்து காப்பாற்றும் உறுப்பு. நீங்கள் வாயில் போடும் எந்த ஒன்றும் கல்லீரல் மூலமாகவே பதப்படுத்தப்படு கின்றது. கல்லீரலுக்கு ஒரு அபார சக்தி உண்டு. பழுதடைந்த செல்களுக்கு பதிலாக தானே புது செல்களை உருவாக்கி தானே சரி செய்து கொள்ளும். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஆக கல்லீரல் பாதுகாப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
* மதுவை அடியோடு விட்டு விடுங்கள்.
* எதற்கெடுத் தாலும் சிறு தொந்தரவுக்கு கூட மருந்துகள் அள்ளி போட்டுக் கொள்ளும் பழக்கத்தினை விடுங்கள். அது எந்த வைத்திய முறை மருந்தாக இருந்தாலும் மேற் கூறியது பொருந்தும்.
* புகை கூடவே கூடாது.

* தூக்கமின்மை கல்லீரலை வெகுவாய் பாதிக்கும்.
* சத்தற்ற உணவு, அதிக எடை இவை கல்லீரலுக்கு எதிரி.
* பழங்கள், பச்சை காய்கறிகள் கல்லீரலை பலப்படுத்தும்
* பி வைட்டமின்கள் குறிப்பாக பி12 கல்லீரல் செயல்பாட்டிற்கு மிக அவசியம். பழங்கள், கொட்டைகள், முட்டை, மீன், பருப்பு வகைகள், பழுப்பு அரிசி, பழைய சாதம் இவற்றில் இந்த வைட்டமின் நன்கு கிடைக்கும்.
Tags:    

Similar News