லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Published On 2017-05-02 09:07 GMT   |   Update On 2017-05-02 09:07 GMT
அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. கொழுகொழு குழந்தைகள் தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்ற தவறான அர்த்தம் அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்பது தான் சிறந்த உணவுப்பழக்கம். இது புரியாவிட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்சினைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும். பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய்.

வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகளுக்கு, பருமன் பிரச்சினை அவ்வளவாக இல்லை. உண்மையில் பீட்சா, பர்கர், கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.



அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன் என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.

பழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும் கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள் களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது. இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன், ஐபாட் போன்ற சாதனங்களின் பயன்பாடும், குழந்தைகளின் எடை கூடுவதற்கு வழிவகுக்கிறது.



ஐந்து வயது வரை, குழந்தைகள் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. இல்லை எனில், உட்கார்ந்தே விளையாடும் வீடியோ கேம்ஸில் மூழ்கி, வெளியில் விளையாடும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது, வெயிலில் நிற்பது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்ற நல்ல பழக்க வழக்கங் களை கற்றுத்தருவது அவசியம்.

குழந்தைகள் அடம் பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலில் உள்ளது.

ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலம் நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு, கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்தத்தால் கூட உடல் பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News