வழிபாடு

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

Published On 2022-06-30 07:28 GMT   |   Update On 2022-06-30 07:28 GMT
  • 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • கடந்த 8 மாதமாக பல்வேறு பரிகார பூஜைகள் நடந்தது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலில் கொடிமரம் புதிதாக நிறுவப்பட்டது. மேலும் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு, ஓவியங்கள் பழமை மாறாமலும் புதுப்பிக்கப்பட்டன. அதே சமயத்தில் கடந்த 8 மாதமாக பல்வேறு பரிகார பூஜைகள் நடந்தது.

கோவில் கருவறையில் உள்ள 22 அடி நீள மூலவர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக சரிசெய்யும் பணிகளும் நடந்து வந்தன. இதற்கான நிதியை திருவிதாங்கூர் அரச வம்சத்தைச் சேர்ந்த லெட்சுமி பாய் வழங்கினார். இந்தநிலையில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவின் முதல்நாளில் மிருதுஞ்சய ஹோமம், பஞ்ச புண்யயாகம், சிறப்பு அபிஷேகம், நாராயணீய பாராயணமும் நடந்தது.

இதனை தொடர்ந்து கோவில் ஒற்றைக்கல் மண்டபம் அருகில் திருவிதாங்கூர் அரசவம்ச வாரிசு லெட்சுமிபாய், அறநிலையத்துறையிடம் மூலவர் திருமேனியை சம்பிரதாயப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. மேலும் திருப்பணியில் ஈடுபட்ட சிற்பி கைலாசன், சித்திரைபானு நம்பூதிரி குழுவினருக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், மேலாளர் மோகன்குமார், கோவில் தந்திரிகள் சங்கரநாராயணரு, சஜித் சங்கரநாராயணரு, சுவாமி பத்மேந்திரா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதியம் குமாரகோவில் முருகன் குழும அதிபர் சிதறால் எஸ். ராஜேந்திரன், என்ஜினீயர் கோபு ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். மாலையில் அஸ்திர கலசம், கலச வாஸ்து ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து பலி, வாஸ்து புண்யாகம், அத்தாழ பூஜை, தீபாராதனையும் நடந்தது. இரவு சுரதவனம் முருகதாஸ் குழு சார்பில் பக்தி இசை சொற்பொழிவு நடத்தப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை)காலை கணபதி ஹோமம் உள்பட கும்பாபிஷேக பூஜைகளை தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக பாலாலயத்தில் பூஜையில் இருந்த சாமி விக்கிரகங்கள் ஒற்றைக்கல் மண்டபத்திற்கு எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News