வழிபாடு

சிவ தாண்டவம்

Published On 2024-05-08 04:15 GMT   |   Update On 2024-05-08 04:15 GMT
  • 108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை.
  • சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம்.

தாண்டவம் என்பதை வடமொழியில் நிருதயம் என்பர். தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் வெவ்வேறு உறுப்புகளும் இயங்குவது தாண்டவம். சிவன், காளி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர் என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை எனப்படுகிறது. அவை காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. இவை ச, ரி, க, ம, ப, த, நி என்ற சப்த (7) சுரங்களிலிருந்து தோன்றியவை. பஞ்ச சபைகளில் ஆடியவை, சிவனது நடன சபை (அரங்குகள்) ஐந்து. திருநெல்வேலி தாமிர சபையில் ஆடியது. காளிகா தாண்டவம். மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடியது சந்தியா தாண்டவம்.

பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் ஆடியது (சிற் சபையில்) கவுரி தாண்டவம். இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவம், திருக்குற்றால சித்திர சபையில் திரிபுர தாண்டவம்; திருவாலங்காட்டு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் (காளியுடன் போட்டியிட்ட தாண்டவம்), ஆனந்தத் தாண்டவம் தில்லை பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) ஆடியவை.

சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம். துடியேந்திய கையில் 'சி' எழுத்தும், வீசிய கரத்தில் 'வா' என்ற எழுத்தும் அபய கரம் 'ய' என்ற எழுத்தையும் தீச்சுடர் ஏந்தியகரம் 'ந' என்ற எழுத்தையும் திருவடியின் கீழ் உள்ள முயலகன் 'ம' என்ற எழுத்தையும் பொருத்திக் காணலாம்.

துடி ஏந்திய வலக்கரம் படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தலையும், தீச்சுடர் ஏந்திய கரம் அழித்தலையும், மற்றொரு கரம் உயிர்களுக்கு முக்தி அருளும் திருவடியையும் காட்டுகிறது. முயலகனை மிதித்துள்ள திருவடி அருள் புரிதலையும் குறிப்பிடுவதாகும். இவ்வாறு சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராஜர் திருஉருவத்தில் உள்ள தத்துவங்களாகும்

Tags:    

Similar News