வழிபாடு

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-01-14 02:02 GMT   |   Update On 2023-01-14 02:02 GMT
  • 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
  • சபரிமலையில் 12-ந்தேதி வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
  • அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது.

திருவனந்தபுரம் :

மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு ஐயப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா... என்ற கோஷம் எழுப்புவர்.

இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

"நடப்பு சீசனையொட்டி சபரிமலையில் 12-ந்தேதி (நேற்று) வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது." என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் கூறினார்.

கடந்த வருடம் 61 நாட்களில் சபரிமலையில் 19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.151 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் பக்தர்கள் வருகையும், வருமானமும் இருமடங்காக அதிகமாகி உள்ளது.

Tags:    

Similar News