வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-09-20 06:51 GMT   |   Update On 2022-09-20 06:51 GMT
  • அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில்.
  • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷாசூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து, 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 26-ந் தேதியன்று அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 27-ந் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 28-ந் தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார்.

29-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும் 30-ந்தேதி காளகா அலங்காரத்திலும், அக்டோபர் மாதம் 1-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். அக்டோபர் 2-ந் தேதி ஸாம்பவி, துர்கா அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவான 3-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும், (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார்.

அக்டோபர் 4-ந்தேதி விஜயதசமியன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News