வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணி விரைவில் தொடங்கும்

Published On 2022-06-07 04:14 GMT   |   Update On 2022-06-07 04:14 GMT
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.
  • மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தையும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான வல்லுனர்கள் குழுவினர் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த குழுவில் கண்காணிப்பு தொல்லியலாளர் மூர்த்திஸ்வரி, ஒய்வு பெற்ற தொல்லியல் நிபுணர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, என்ஜினீயர் முத்துசாமி, ராஜாபட்டர், கோவிந்தராஜபட்டர், இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஸ்தபதி ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் 2-வது நாளாக நேற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், மீனாட்சி கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து வல்லுனர் குழுவினர் கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோவில் உதவி கமிஷனர் செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் வல்லுனர்கள் குழுவினர் கூறியதாவது, மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்து அதனை அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வந்துள்ளோம். மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்புதலை நாங்கள் வழங்கிய உடன் விரைவில் திருப்பணிகள் தொடங்கும்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி தற்போது நடந்து வருகிறது. ஆகம விதிப்படி பழமை மாறாமல் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் உள்ள அன்னதான கூடத்தை மாற்றி அங்கு சுவாமியின் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News