வழிபாடு

தஞ்சை பெரிய கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மன்

Published On 2022-07-09 05:06 GMT   |   Update On 2022-07-09 05:06 GMT
  • அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
  • வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News