வழிபாடு

சாந்தநாதசுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2022-07-06 05:38 GMT   |   Update On 2022-07-06 05:38 GMT
  • நடராஜர் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி திருமஞ்சன விழா நடராஜருக்கு உகந்த நாள் ஆகும். திருமஞ்சனம் என்றால் மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் விழா என்றே அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும், ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவ பெருமானின் அனைத்து தலங்களிலும் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கும் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், விபூதி, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், திருவரங்குளம் அரங்குளநாதர்கோவில் உள்ளிட்ட சிவன் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவுடையார்கோவில் வடநகர் ஆதிகைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News