search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nataraja"

    • 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
    • ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜபெருமானின் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 26-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவா லங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 33க்கு மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடைபெறும்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.

    பின்னர் 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 28-ந் தேதி காலை, 9 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், செயல் அலுவலர் ரமணி, மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • மக்கள், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.
    • இந்த நடராஜர் சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்டது.

    சுவாமிமலை:

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9,10-ந் தேதிகளில் 'ஜி-20' மாநாடு நடைபெற உள்ளது.

    மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் ஆகியோர் நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணியை தொடங்கினர்.

    75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த சிலையை நேற்று இந்திரா காந்தி தேசிய கலை மைய தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து சிலை டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ஸ்தபதி கள் கூறியதாவது:-

    டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன நடராஜர் சிலை சோழர் கால முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் 'ஜி-20' மாநாட்டு முகப்பில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது.

    சிலையில் மீதமுள்ள 25 சதவீத பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் டெல்லி செல்கிறார்கள்.

    அங்கு சிலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்படும். இந்த நடராஜர் சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்டது.

    25 டன் எடை உள்ள இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    உலகத்திலேயே இந்த சிலை தான் மிகப்பெரியது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது.
    • பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது. இக்கோவிலின் மத்தியில் ராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதை சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார். மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள். ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது. முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது. ஈசன்-ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் `ஆனந்த தாண்டவம்' ஆடுகின்றார்கள். இரண்டாவது நாள் `சந்தியா தாண்டவம்'. மூன்றாவது நாள் `சம்ஹாரத் தாண்டவம்' ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது. ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது. பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது. நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல. என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார். மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார். பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு என புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள். இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள். வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது. ஆடலரசன் தன் காதில் இருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார். பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள். கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை. புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார். பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார். ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை. தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த `தலம்' ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற `தலம்' தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும். இந்த போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பரதவ மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம் இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் தன்னுடைய உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன் வழிபட்டு செல்வார்கள்.

    ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும். எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம். இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள். இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    • தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    • நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில். இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம்.

    அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம். இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

    கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

    ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிட கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

    நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது. இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

    மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

    நான்காவது பிரகாரத்தை அடுத்து கோயிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன. இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.

    உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.

    இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன. இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும், ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

    நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

    இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.

    கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

    சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

    • இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போல காட்சி தருகிறார்.
    • இந்த நடராஜரை அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போல காட்சி தருகிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்தல இறைவனை 'பூமிநாதர்' என்றும் அழைக்கிறார்கள். அம்பாளின் பெயர் 'அங்கவளநாயகி' என்பதாகும்.

    வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும், இறைவியும் பஞ்ச லோகத்தால் ஆன குழம்பைக் குடித்து, நடராஜர், சிவகாமி அம்பாள் தம்பதியராக காட்சி கொடுத்துள்ளனர். இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும்.

    நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும். இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

    • பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு ஆணை பிறப்பித்தது.
    • கனகசபை நடராஜ பெருமான் அபிசேகம் கொண்டு அருளும் இடம்.

    சென்னை:

    சிதம்பர ரகசியம் என்று சொல்வதைப் போல் சிதம்பரம் கனகசபை விவகாரமும் பேசு பொருளாகி இருக்கிறது.

    கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் கூற, விவகாரம் கோர்ட்டு வரை சென்று இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்து கொள்ளலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி 4 நாட்கள் கனகசபை மீது ஏற தீட்சிதர்கள் தடை விதித்ததால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அறிவிப்பு பலகையை அதிகாரிகள் அகற்றினார்கள். தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி நேற்று சில அதிகாரிகள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தார்கள்.

    தில்லை நடராஜர் கோவில் வானவியல், பொறியியல் துறை, புவியியல் எல்லாவற்றையும் மிஞ்சிய உச்சகட்ட அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடம் பூகோளத்தின் பூமத்திய ரேகையின் மிக சரியான மைய பகுதியில் அமைந்து இருக்கிறது.

    பஞ்ச பூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலும், காற்றை குறிக்கும் காளகஸ்தியும், நிலத்தை குறிக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது.

    விஞ்ஞானத்தின் மிகப் பெரிய வளர்ச்சியின் மூலம் நடந்த ஆராய்ச்சியில் இதை கண்டறிந்துள்ளார்கள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சி அடையாத காலத்திலேயே வானசாஸ்தி ரம், பூகோளம், பொறியியல் எல்லாவற்றையும் தங்கள் மதி நுட்பத்தால் உணர்ந்து அமைத்துள்ளார்கள். அதற்கு காரணம் இறைவனின் அனுக்கிரகம் என்கிறார்கள்.

    அதிசயங்களும், ரகசியங்களும் நிறைந்த இந்த கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம் (கனக சபை) பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என 5 சபைகள் உள்ளன. இதில் சிற்றம்பலம் நடராஜர் திருநடனம் புரிந்து அருளும் இடம்.

    கனகசபை நடராஜ பெருமான் அபிசேகம் கொண்டு அருளும் இடம். கனக சபையின் முகப்பை கொங்கு நாட்டில் இருந்து கொண்டு வந்த சுத்த தங்கத்தால் வேய்ந்தான் என்று சேக்கிழார் பாடிய பாடலிலும், கல்வெட்டு பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

    பேரம்பலம் என்பது தேவ சபை.

    நிருத்த சபை இறைவன் ஊர்த்தவ தாண்டவம் செய்து அருளிய இடம். ராஜ சபை என்பது ஆயிரம் கால் மண்டபம். சோழமன்னர் மரபில் முடி சூட்டப்படும் மன்னர்களுக்கு இங்கு வைத்து தான் முடி சூட்டு விழா நடை பெற்றுள்ளது.

    இந்த 5 சபைகளையும் சோழர் பரம்பரையில் வந்த சோழர்கள் நேர்த்தியாக பராமரித்துள்ளார்கள்.

    இந்த கோவில் அமைப்பே மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கனகசபை மற்ற கோவில்களை போல் இல்லாமல் இடது புறமாக அமைந்து இதயத்தை குறிக்கிறது. இந்த சபையை அடைய பஞ்சாட்சர அதாவது சிவாய நம என்ற 5 படிகள் வழியாக ஏற வேண்டும். 4 வேதங்களை குறிக்கும் வகையில் 4 தூண்கள் கனகசபையை தாங்கி நிற்கிறது.

    கனகசபை மண்டபத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன.

    இந்த கோவிலில் மூல வரே உற்சவராகவும் இருப்பது தனி சிறப்பு. நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது இங்குள்ள வழிபாட்டின் முக்கியமானது. ஆனால் கனகசபை மீது பக்தர்கள் ஏற அனுமதிக்காதது விசுவ ரூபமானது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படு வதில்லை. இது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும் என்று கூறி கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனகசபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அற நிலையத்துறையினர் கடந்த 24-ந் தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து கனகசபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    கனகசபை மீது பக்தர்கள் நின்று வழிபட்டு வருவது தொன்று தொட்டு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. திருமஞ்சன விழாவிலும் நிகழ்ச்சி ஒரு பக்கம் நடக்கட்டும். ஒரு பக்கத்தில் பக்தர்களை அனுமதிக்கவும் துறை சார்பில் கூறப்பட்டு இருந்தது.

    கனக சபையில் ஏறி பக்தர்கள் வழிபடுவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு குறிப்பிட்ட மாதத்தில் வரும் நாளில் நடைபெறும் பூஜைகள் சிறப்புக்குரியவை. அந்த வகையில் ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜையும், மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜையும், சித்திரை திருவோணத்தில் மதிய பூஜையும், ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜையும், ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

    நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள்.
    • நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

    ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவன் கோவில்களில் முதன்மையான கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.

    சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து, விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. நடராஜர் கோவிலில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும், தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிவார்கள்.

    நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா.

    பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசியில் அக்னி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் தொடக்கி வைத்தவர் யார் தெரியுமா? யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த 2 பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

    • சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடராஜரின் உருவசிலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த பணிகளானது ஒரு ஆண்டுக்குள் முடியும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித யாத்திரை தலமாகும். இந்தநிலையில் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் உலக சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் 51 அடி உயரத்தில் நடராஜரின் ஐம்பொன் உருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறக்கட்டளை பொறுப்பாளர் ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் தலைமையில் நேற்று முன்தினம் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து வந்திருந்த திருவாசக சித்தர் தாமோதரன் சுவாமிகள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில உள்துறை மந்திரி நமச்சிவாயம், பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர் பொருளாளர் சுரேஷ், முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் பூபதி மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் சிவனடியார்கள் நடராஜரின் புகழ் குறித்து ஆன்மிக பாடல்களை பாடியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். சன்னதி தெரு, அக்னிதீர்த்த கடற்கரை, சங்குமால் கடற்கரை சாலை வழியாக ஓலைக்குடா கடற்கரையில் நடராஜர் சிலை அமைய உள்ள விழா பகுதிக்கு வந்தனர். சிவனடியார்களை ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் வரவேற்றார்.

    இதுகுறித்து உலக சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை பொறுப்பாளர் ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் கூறியதாவது, ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் சுமார் 90 டன் எடையில் 51 அடி உயரத்தில் ஐம்பொன் நடராஜர் உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான விழாவானது சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள், ஆன்மிக பெரியோர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் ராமேசுவரத்தில் இந்த நடராஜரின் சிலை அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடராஜரின் உருவசிலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளானது ஒரு ஆண்டுக்குள் முடியும் என்றார்.

    • சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
    • நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.

    தேரோட்டம் முடிந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை)அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி, நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடந்தது.

    பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.

    திருமஞ்சன தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை (27-ந் தேதி)பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இத்துடன் ஆனி திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும்.
    • நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்.

    சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி - மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது.

    அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.

    சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். இந்த ஆனித் திருமஞ்சன நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.

    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம். விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.

    தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    விரதம் இருந்து நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனம் கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.

    • நாளை தேர் வீதி புறப்பாடு நடக்கிறது.
    • 26-ந்தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    சென்னை சூளை, ஏ.பி. ரோட்டில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (திங்கட் கிழமை) ஆனித் திருமஞ்சன மகோற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஆனி தரிசனம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.

    முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மகா தீபஆராதனையும், 8 மணிக்கு தேர் வீதி புறப்பாடும் நடக்கிறது. 26-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    ×