வழிபாடு

யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

Published On 2022-07-28 05:16 GMT   |   Update On 2022-07-28 05:16 GMT
  • தினமும் முன்னோரை வழிபடவேண்டும்.
  • முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை.

தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

'எனக்கு அப்பா இருக்கிறார். அம்மா இல்லை', 'எனக்கு அம்மா உண்டு, அப்பா இல்லை', எனக்கு அப்பா அம்மா இரண்டுபேருமே இல்லை, இறந்துவிட்டார்கள்' என்றால் அவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

'என் அண்ணன் இருக்கிறார். அவர்தான் கொள்ளிவைத்தார். தம்பி உண்டு. அவர்தான் கொள்ளிவைத்தார்' என்றாலும் தாயாரை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த சகோதரர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். 'என் அண்ணன் தர்ப்பணம் செய்கிறாரே. நானும் செய்யவேண்டுமா?' எனும் கேள்விக்கே இடமில்லை.

மகன்கள் அனைவருக்கும் சொத்தில் எப்படி பங்கு உண்டோ, மகன்கள் அனைவருக்கும் பெற்றோரின் கடனை அடைப்பது எப்படிக் கடமையோ, அதேபோல், மகன்கள் எல்லோருமே தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அப்படிச் செய்யாததெல்லாம் பாவமாக, நம் தலையிலும் நம் சந்ததியினரின் தலையிலும் வந்துவிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

ஆகவே, அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.

இன்று ஆடி அமாவாசை. முன்னோர்களை வணங்குவோம். அவர்களுக்கு புண்ணியங்களைக் கொடுத்து, புண்ணியங்களைப் பெறுவோம். நம் சந்ததியினருக்கும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுப்போம்.

Tags:    

Similar News