வழிபாடு
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்

Published On 2022-04-04 08:40 GMT   |   Update On 2022-04-04 08:40 GMT
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளின் கோபுரங்களுக்கு திருப்பணிகள் தொடங்கின.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்ற இக்கோவில் பூலோக வைகுண்டம் திருவிண்ணகர் என போற்றப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. தற்போது மீண்டும் குடமுழுக்கு நடத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளின் கோபுரங்களுக்கு திருப்பணிகள் நேற்று தொடங்கின. இதையொட்டி நேற்று திருப்பணிக்கான பாலாலய பூஜைகள் நடந்தன. அப்போது சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடந்தன.

இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், திருநாகேஸ்வரம் பேரூராட்சி தலைவர் ஜோதி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராயா.கோவிந்தராஜன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கோவிலின் திருப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து குடமுழுக்கு நடத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாலாலய பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News