ஆன்மிகம்
பழனி கோவில்

பழனி கோவிலில் 2-ந்தேதி பாலாலய பூஜை

Published On 2019-11-21 07:07 GMT   |   Update On 2019-11-21 07:07 GMT
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜை வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். விழாக்காலங்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவ்வாறு புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையே கோவில் கோபுரத்தில் உள்ள சுதைகள், சிற்பங்கள், மண்டபத்தின் பல தூண்கள் சேதமடைந்து காணப்பட்டதால், பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடந்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜை வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 2-ந்தேதி பாலாலய பூஜை நடைபெற்று, அதன்பின்பு மலைக்கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் திருப்பணிகள் தொடங்கப்படும்.

இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News