ஆன்மிகம்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் உருவ அமைப்பு

Published On 2019-10-09 09:01 GMT   |   Update On 2019-10-09 09:01 GMT
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சுயம்புவாகத் தோன்றியதோடு தன் உருவத்தை தானே தீர்மானித்துக் கொண்டவள் என்ற சிறப்பைப் பெற்றவள். தமிழ்நாட்டில் எந்த சக்தி தலத்திலும் அம்பாள் நடத்தாத அற்புதம் இது.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சுயம்புவாகத் தோன்றியதோடு தன் உருவத்தை தானே தீர்மானித்துக் கொண்டவள் என்ற சிறப்பைப் பெற்றவள். தமிழ்நாட்டில் எந்த சக்தி தலத்திலும் அம்பாள் நடத்தாத அற்புதம் இது.

லட்சோப லட்சம் பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ள குலசை முத்தாரம்மன், தன் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள பக்தர்கள் கனவில் தோன்றி உத்தரவிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளாள். தமிழ் நாட்டில் வேறு எந்த அம்மன் ஆலயத்திலும் இந்த அற்புதங்கள் நீடிப்பதாக தெரியவில்லை. இவ்வளவு மகிமை வாய்ந்த முத்தாரம்மனின் உருவ அமைப்பு எழில் மிகுந்தது. அவள் உருவ அமைப்பு ஒவ்வொன்றும், பக்தர்களுக்கு ஒவ்வொரு வகையில் அருள் செய்யக் கூடியதாகும்.

அது மட்டுமல்ல முத்தாரம்மனின் வடிவமைப்பு மானிடர்களின் தோஷங்களை நீக்கும் ஆற்றல் படைத்தது.  குலசை முத்தாரம்மன் தனது தலையில் ஞானமுடி சூடி உள்ளாள். கண்களில் கண்மலர், வீரப்பல், கழுத்தில் பொட்டுத் தாலி, மூக்குத்தி மற்றும் புல்லாக்கு ஆகியவற்றோடு காட்சியளிக்கிறாள். முத்தாரம்மனுக்கு நான்கு கைகள் உள்ளன. வலப்புற மேல் கையில் உடுக்கை உள்ளது. கீழ் கையில் திரிசூலம் இடம் பெற்றுள்ளது. இடப்புற மேல் கையில் நாகபாசம், கீழ் கையில் திருநீற்றுக் கொப்பரை உள்ளன.

முத்தாரம்மனின் ஞான முடி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய சக்திகளை கொண்டது. உயிர்களுக்குச் செய்ய வேண்டியதை அம்பாள் அறிவாள் என்பதே இதன் தத்துவமாகும். முத்தாரம்மனின் கண்கள் மலர் போன்றது. அந்தக் கண்கள் மூலம் அனைத்து உயிர்களையும் உற்று நோக்கி, அவை அனைத்திற்கும் வீடு பேறு அளிப்பதையே கண் மலர் குறிக்கிறது.

சிவ ஆகமங்களில் கூறிய நீதியைக் கடைப்பிடித்து வாழாதவர்களை கண்டு பிடித்து தண்டித்து ஆட்கொள்ளும் கருணையைக் குறிக்கும் விதமாக அன்னையின் வீரப்பல் அமைந்துள்ளது. அம்பாள் பொட்டுத் தாலி அணிந்திருப்பதன் காரணம் என்னவென்றால், சூரியனும், ஒளியும் எப்படிப் பிரிவின்றி ஒருமித்து நிற்கின்றதோ, அதுபோல இறைவனும், இறைவியும் பிரிவின்றி சேர்ந்து இருப்பதை உணர்த்துகிறது.

சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்றும் தாமே ஒளிவிடும் ஆற்றல் படைத்தவை. அவற்றிற்கு ஒளியைத் தனது மூக்குத்தி மூலமே அன்னை வழங்கி வருகிறாள் என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் அணிந்திருக்கும் புல்லாக்கிற்கும் ஒரு காரணம் உண்டு. உலகில் உள்ள அனைத்தையும் அன்னைதான் இயக்குகிறாள் என்பதையே அம்மன் அணிந்துள்ள புல்லாக்கு குறிக்கிறது.

முத்தாரம்மனின் கைகள் நான்கில், வலப்புற மேல் கையில் ஏந்தியுள்ள உடுக்கையில் இருந்து எப்போதும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம் ஒலித்தவாறே இருக்கும்.
‘ஓம்’ என்ற எழுத்தில் ஐந்து தமிழ் எழுத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அதாவது, படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலைக் குறிப்பதாகவே இந்த ‘ஓம்’ அமைந்துள்ளது.

அன்னையின் மற்றொரு கையில் திரிசூலம் உள்ளது. சூலத்தின் மூன்று தலைகளில் நடுத்தலை ஞான சக்தியையும், மற்ற இரு தலைகளும் இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியையும் குறிக்கின்றன. முத்தாரம்மனின் இடது புறமேல் கையில் நாகபாசம் உள்ளது. நாகம் என்றால் மேலானது என்று பொருள். பாசம் என்றால் கட்டு என்று அர்த்தம். அதாவது, மண்ணிலும், அழுக்கிலும் கிடந்த குழந்தையைக் கருணையுடன் தன் கரங்களால் தொட்டுத் தூக்கி, சுத்தம் செய்வதைப் போல, ஆணவ குப்பையில் கிடந்து உழலும் உயிர்களைப் பாசத்துடன் எடுத்து உதவிகள் பலசெய்து, வீடுபேறு வழங்குவதைத்தான் நாகபாசம் குறிக்கிறது.

அம்மனின் கீழ் கையில் திருநீற்றுக் கப்பரை உள்ளது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க, படகு போன்ற இத்திருநீற்றுக் கப்பரை உதவும் என்பதே அதன் ஒப்பற்ற தத்துவம். இந்த திருநீற்றுக் கப்பரையில் நந்தி, நாகம், சிவலிங்கம், திரிசூலம், பொம்மை ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்து உயிர்களுக்கும் முத்தாரம்மன் பதினாறு செல்வங்களையும் இடையறாது வழங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை நந்தி குறிக்கிறார். உலகைத் தாங்கி நிற்கும் அனந்தன் போல தானும் உலகைக் காத்து நிற்பதை நாகம் குறிக்கிறது. சிவலிங்கம் என்பது பிரம்ம பாகம், திருமால் பாகம், உருத்திர பாகம், ஆவுடை பாகம் என்ற நான்கு பாகங்களை உடையது.

பிரம்மா, திருமால், உருத்திரன், சக்தி ஆகிய நான்கும் ஒருங்கிணைந்த இந்த சிவலிங்கம், போகலிங்கம் எனப்படும். இவற்றின் மூலம் அன்னை போகங்களை வழங்கி வருகிறாள் என்பது இதன் பொருளாகும். உயிர்கள் அனைத்துக்கும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை உள்ளன. இவற்றிற்குத் தாமே இயங்கும் சக்தி கிடையாது. இதனை அம்பாள் முத்தாரம்மன் தன்னுடைய சக்தியால் இயங்க வைக்கிறாள். இதனை உணர்த்துவதே திரிசூலம் ஆகும்.

மேலும், திருநீற்று கப்பரையில் அமைந்துள்ள பொம்மை, ஒரு குழந்தை வடிவத்தை ஒத்திருக்கிறது. அதாவது தூய்மையான வெள்ளை உள்ளம் கொண்டவர்களிடம் அன்னை குடிகொண்டிருக்கிறாள் என்பதே இதன் தத்துவம். இதுபோன்று பல்வேறு பொருள் பொதிந்த காரணங்களுடன் முத்தாரம்மன் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்கிறாள்.

குலசையில் முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் கதை என்னும் செங்கோலைத் தன் வலது கையில் தாங்கிய நிலையில் உள்ளார். அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார் என்பதே இதன் தத்துவம். ஞானமூர்த்தீஸ்வரர் தன் இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். அதில் உருவங்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. விபூதி மட்டுமே அதில் உள்ளது.

விபூதிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. ‘வி’ என்றால் மேலான என்று பொருள். ‘பூதி’ என்றறால் செல்வம் என்று அர்த்தம். மேலான செல்வத்தை பக்தர்களுக்கு அருளும் வல்லமை படைத்தவர் என்று இதற்கு பொருள். ஞானமூர்த்தீஸ்வரர் என்று பெயர் பெற்றதற்கும் காரணம் இருக்கிறது. ஞானம் என்றால் பேரறிவு மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம்.

தவம் இருப்பவர்களுக்கு ஈஸ்வரன் பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி எனப்படுகிறார். ஞானமுடி சூடியிருப்பதாலும், ஞானபீடத்தில் எழுந்தருளிடயிருப்பதாலும் இவர் ஞானமூர்த்தியாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
Tags:    

Similar News