ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் கோவில் முருகப்பெருமானுக்கு முக்கனி படையல் நாளை நடக்கிறது

Published On 2019-07-15 06:49 GMT   |   Update On 2019-07-15 06:49 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு முக்கனி படையல் பூஜை நடக்கிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஊஞ்சல் திருவிழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ளது அதில் தினமும் இரவு 7 மணி அளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திருவிழாவின் 9- வது நாளான இன்று(திங்கட்கிழமை) இரவு 7 மணிக்குஊஞ்சல் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை (செவ்வாய்க் கிழமை) கோவிலின் கருவறையில் முருகப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு விசேஷ பூஜை நடக்கிறது. இதேபோல கோவிலின் கருவறையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய், பெருமாள் ஆகிய 4 சன்னதியிலும் சாமிக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு மகா பூஜை நடக்கிறது. மேலும் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியிலும் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு முக்கனிகள் படைக்கப்படுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலுக்குள் உள்ள யானை தங்கும் மண்டபத்தில் பகல் 12 மணிஅளவில் சாமி எழுந்தருளுகிறார்.

அங்கு சாமிக்கு விசேஷ பூஜையும் மகாதீப, தூப, ஆராதனையும் நடக்கிறது. மேலும் மறைந்த கோவில் யானை அவ்வை படத்திற்கு மாலை அணிவித்து பூஜை நடக்கிறது. கோவில் யானை தெய்வானைக்கு பரிவட்ட மரியாதை செய்யப்படுகிறது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் சாமி புறப்பாடு நடக்கிறது.
Tags:    

Similar News