ஆன்மிகம்

அனபா யோகத்தில் பிறந்தவர்கள் பாக்கியசாலிகள்

Published On 2019-06-21 05:20 GMT   |   Update On 2019-06-21 05:20 GMT
சந்திரனை மையமாகக் கொண்டு ஏற்படுவது அனபா யோகம் ஆகும். அனபா யோகத்தில் பிறந்தவர்கள் பாக்கியசாலிகள் என்பதை பல ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒருவரது ராசியை நிர்ணயிக்கும் சந்திரனுக்கு ஜோதிட ரீதியாக தனிப்பட்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமர்ந்துள்ள பல்வேறு நிலைகளின் அடிப்படையில் யோகங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சந்திரனை மையமாகக் கொண்டு ஏற்படுவது அனபா யோகம் ஆகும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ராசிக்கு 12-ம் ராசியில் சூரியன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது. அனபா யோகத்தில் பிறந்தவர்கள் பாக்கியசாலிகள் என்பதை பல ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

பிறப்பிலிருந்தே நற்குணங்கள் அதிகம் கொண்ட இவர்களிடம், மற்றவர்களை தன் பக்கம் கவரும் வகையிலான காந்த சக்தி இருக்கும். பொறுமைசாலியான இவர்கள், சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவதுடன், அரசாங்கத்தின் ஆதரவை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அனபா யோக ரீதியாக சந்திரன் அமர்ந்த இடத்திற்கு 12-ம் இடத்தில் குரு அமர்ந்திருந்தால், மதத்தின் மீது பற்று உள்ளவர்களாகவும், யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

12-ம் இடத்தில் சுக்ரன் இருக்கப் பெற்றால் உலக சுக போகங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். 12-ம் வீட்டில் புதன் அமர்ந்திருந்தால் எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் அதிகாரமும், பிறரை வழி நடத்தக்கூடிய தலைமை பொறுப்பும் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் கலவையான நற்பலன்கள் உருவாகும்.

Tags:    

Similar News