ஆன்மிகம்
வேலூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் புஷ்ப பல்லக்குகள் பவனி வந்ததை படத்தில் காணலாம்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேலூரில் 9 புஷ்ப பல்லக்கு ஊர்வலம்

Published On 2019-04-19 06:47 GMT   |   Update On 2019-04-19 06:47 GMT
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேலூரில் மின்விளக்குகள் அலங்காரத்தில் 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் புஷ்ப பல்லக்கு திருவிழா முக்கியமான தாகும். பல்வேறு அமைப்புகள் சார்பில் வேலூரில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி புஷ்பபல்லக்குகளின் ஊர்வலம் நேற்று நடந்தது.

ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, அரிசி மண்டி சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி சார்பில் சுந்தர விநாயகர் கோவில் புஷ்ப பல்லக்கு, பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் வேம்புலிஅம்மன் கோவில் சார்பில் வேம்புலி அம்மன் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன அனைத்து பணிமனை உரிமையாளர் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கையம்மன் புஷ்ப பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் சார்பில் லட்சுமி நாராயணா புஷ்ப பல்லக்கு, சலவன்பேட்டை ஆணைகுளத்தம்மன் கோவில் புஷ்பபல்லக்கு, கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு ஆகிய 9 பல்லக்குகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த பல்லக்குகள் வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் (லாங்குபஜார்) ஒன்றாக சேர்ந்தபிறகு அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு, அண்ணாசாலை வழியாக வேலூர் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

இந்த புஷ்ப பல்லக்குகளில் எந்த பல்லக்கு நன்றாக உள்ளது என்பதை பார்க்கவும், சாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேலூருக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததை ரோட்டின் இருபுறமும் நின்று பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் கிருபானந்தவாரியார் சாலையில் பல்வேறு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்னிசை கச்சேரி மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமால், அழகுராணி, அண்ணாதுரை மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News