ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தீ வெட்டி ஊர்வலம்

Published On 2019-03-11 03:34 GMT   |   Update On 2019-03-11 03:34 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ வெட்டி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. பெண்களின் சபரிமலை என்றும் இந்த கோவில் அழைக்கப்படும். இத்தகைய சிறப்புமிக்க பகவதி அம்மன் கோவிலில் கடந்த 3-ந் தேதி மாசி திருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, நவீன வில்லிசை, சமய மாநாடு, யானை மீது களப பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு வலிய படுக்கை நடந்தது. நேற்று 7-வது திருநாளையொட்டி கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள், கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கடலில் பாதத்தை நனைத்து அம்மனை தரிசனம் செய்தனர். கால் பாதத்தை நனைக்கும் போது ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் கண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுகிறது. பின்னர் காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் மற்றும் களபம் பவனி வருதலும் தொ டர்ந்து சமய மாநாடும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் நடக்கிறது. மாநாட்டுக்கு ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார். 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து தீ வெட்டி ஊர்வலம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு திருக்கோவிலின் இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்குகிறார். தீவெட்டி கமிட்டி தலைவர் ராஜகுமார், உதவி தலைவர் சந்தனகுமார், செயலாளர் செல்லம், உதவி செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜய ரங்கன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முதல் விளக்கை மதுரை கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேல் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தீவெட்டி ஊர்வலம் கோவிலை சுற்றி வலம் வருகிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
Tags:    

Similar News