ஆன்மிகம்
பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம்

Published On 2019-02-18 05:06 GMT   |   Update On 2019-02-18 05:06 GMT
திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து விழாவை தொடங்கினர். அதேபோல் இந்த சமூகத்தார் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்தப்பட்ட பின்பு கோவிலில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

அதன்படி இந்த வருட மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் 4 ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதனையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மன் அழைத்தல் நடைபெற்று வீதிஉலா தொடங்கியது. இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு, மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

அதனைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம், கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதைபோல விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்தேர் முன்செல்ல, அடுத்ததாக விஸ்வ பிரம்மா மின்தேர், 3-வதாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்கார மின்தேர் வீதிஉலா ரதவீதிகள் வழியே வலம் வந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கோவிலை அடைந்தது. அதன்பிறகு கொடியிறக்கம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்ம மகாஜன சபா பொது செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், இயக்குனர்கள் குமரேசன், பாண்டி, இணை செயலாளர் சின்னு, துணை செயலாளர் முத்து, காளிராஜ், சண்முகம் உள்பட அனைத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News