ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2018-12-13 04:56 GMT   |   Update On 2018-12-13 04:56 GMT
அழகர்கோவில் கள்ளழகர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வருகிற 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது எதார்த்தம். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளி கள்ளழகர் பெருமாள் அருள்பாலிப்பார்.

இக்கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், அதே நாளில் அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளுவார். அப்போது ஆயிரகணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இரவு 7.15 மணி அளவில் நடைபெறும். அப்போது பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலான கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் வருகிற 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது விசேஷத்திலும் விசேஷம். பெருமாள் கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால் திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் மலையை குடைந்து கருவறையாக அமைந்துள்ள 5 சன்னதிகளில் பவளக்கனிவாய் பெருமாள் சன்னதியும் ஒன்று. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் 18-ந்தேதி மாலை 6 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News