ஆன்மிகம்
திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று மாலை 4 மணியளவில் தங்கத்தேரோட்டம் நடந்தது.

திருப்பதியில் நடந்த தங்கத்தேரோட்டம் - இரவு யானை வாகன வீதிஉலா

Published On 2018-09-19 03:38 GMT   |   Update On 2018-09-19 03:38 GMT
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மாலையில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலாவும் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. ராம அவதாரத்தை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி வில்-அம்புடன் கோதண்டராமராக தங்க, வைர நகைகளால் அலங்கரித்து அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. நடன கலைஞர்கள் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். கேரள செண்டை மேளம், தாரை தப்பட்டை இசைக்கப்பட்டது. அனுமார் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார்கள்.

அனுமந்த வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி வில், அம்புடன் கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.


இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை யானை வாகன வீதி உலா நடந்தது. கஜேந்திர மோட்சத்தில் யானை ஒன்றின் அபயக்குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீசுதர்சனச் சக்கரத்தால் முதலையை வதைத்து யானையை காப்பாற்றினார். எனவே கஜேந்திர மோட்சத்தை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி யானை மீது எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட வாகன வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுதா நாராயணமூர்த்தி, பி.ரமேஷ்பாபு, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. 
Tags:    

Similar News