ஆன்மிகம்

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2018-09-18 04:44 GMT   |   Update On 2018-09-18 04:44 GMT
கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது.

நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை ஹோமம், திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.

விழாவில், தினசரி யாகசாலை பூஜையும், இரவு சாமி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திர வரதராஜபெருமாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புரட்டாசி திருவோண கருட சேவையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. 22-ந்தேதி (சனிக்கிழமை) புஷ்ப யாகம், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.

23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலை ஹோமமும், மாலை 6 மணிக்கு 108 கலசாபிஷேகம், ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. 
Tags:    

Similar News