ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் பவனி

Published On 2018-09-14 09:23 GMT   |   Update On 2018-09-14 09:23 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம் மோற்சவ விழா நேற்றுமாலை கொடி யேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. முதல் வாகன புறப்பாடாக நேற்றிரவு பெரிய சே‌ஷம் எனும் 7 தலைகளுடன் கூடிய தங்க நாக வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.

பாற்கடலில் மகாவிஷ்ணுவை எப்போதும் தன் உடலால் தாங்குபவர் ஆதிசே‌ஷன். ஆதிசே‌ஷனின் வடிவமாக கருதப்படுவது 7 தலைகள் கொண்ட பெரிய சே‌ஷ வாகனம். இதனால், ஆதிசே‌ஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் முதல் வாகனமாக பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலித்தார்.

பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம், வழக்கமாக இரவு 9 மணிக்கு தொடங்கும் வாகனசேவையை இம்முறை 8 மணிக்கே நடத்தியது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற பெரிய சே‌ஷ வாகனத்தின் முன்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய கலைக் குழுவினர் ஆடல், பாடலுடன் மேளதாள வாத்தியங்களை இசைத்தனர்.

பிரம்மோற்வ விழாவின் 2-ம் நாளான இன்றுகாலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி உலா வந்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.

இதைத்தொடர்ந்து, இன்று இரவு தங்க அம்ச வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பவனி வருகிறார். நாளை காலை சிம்ம வாகன த்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 16-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், அன்றிரவு சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 17-ந் தேதி இரவு நடக்கிறது. கருட சேவையை தரிசிக்க சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News