ஆன்மிகம்

அருள்புரியும் ஆதிவிநாயகர்

Published On 2018-09-11 06:29 GMT   |   Update On 2018-09-11 06:29 GMT
திருவாரூர் திலதர்ப்பணபுரி என்னும் செதலபதியில் விநாயகர் மனித முகத்துடன் நரமுக விநாயகராக காட்சி அளிக்கிறார். இவரே ஆதி விநாயகர் என கருதப்படுகிறார்.
ஒரு முறை கயிலாயத்தில் பார்வதி தேவி நீராடிக் கொண்டு இருந்தார். அப்போது தனக்கென்று ஒரு காவல் தெய்வம் வேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய உடலில் கங்கை நீர் கலவையையும், எண்ணெயும் தேய்த்து குழைத்த போது திரண்ட உருவத்திற்கு உயிர்கொடுத்து விநாயகராக உருப்பெற செய்தார். மேலும் குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை குழைத்து அதில் அழகிய உருவம் கொடுத்து விநாயகப்பெருமானை தோற்றுவித்தார். பார்வதி தேவி, விநாயகரை வீட்டு வாசலில் இருக்க வைத்து உள்ளே தான் குளித்து கொண்டு இருக்கையில் எவரையும் அனுமதிக்ககூடாது என்று கூறினார். அப்போது வீட்டுக்கு திரும்பி வந்த சிவபெருமானை விநாயகர் வாசலிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்.

கோபம் கொண்ட சிவன், விநாயகரை யாரோ என்று நினைத்து அவரது கழுத்தை வெட்டி விட்டார். இதையறிந்து பார்வதிதேவி மிகவும் வருத்தப்பட்டாள். அவரை சமாதானப்படுத்தும் விதத்தை வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கி கொண்டு இருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டி கொண்டு வரும் படி தனது சேவகர்களுக்கு சிவபெருமான் உத்தரவிட்டார்.

அவ்வாறே சேவகர்கள் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கி கொண்டு இருந்த ஒரு யானையின் தலையை வெட்டி எடுத்து வந்து சிவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் விநாயகரது உடலுடன் யானை தலையை பொருத்தினார். பூதகணங்களுக்கு அவரை தலைவனாக்கி மகிழ்ந்தார். பார்வதி தேவி உருவாக்கிய விநாயகர் மனித முகத்துடன் காட்சி அளித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகில் திலதர்ப்பணபுரி என்னும் செதலபதியில் விநாயகர் மனித முகத்துடன் நரமுக விநாயகராக தனி சுகாசனத்தில் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இவரே ஆதி விநாயகர் என கருதப்படுகிறார். இவரது சன்னதி மேற்கு நோக்கி அமைந்து இருப்பது மேலும் சிறப்பு அம்சமாகும். இந்த ஆலயம் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பட்டது. இறைவன் பெயர் ஸ்ரீமுக்தீஸ்வரர், இறைவி பெயர் ஸ்ரீசுவர்ணவல்லி.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் ராமர் திலதர்ப்பணம் செய்த தலமானதால் இந்த ஊர் திலதர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம் முதலான ஆகம பூஜைகள் செய்ய வேண்டிய புனித தலமாகும். 
Tags:    

Similar News