ஆன்மிகம்

கள்ளழகர் விடிய விடிய தசாவதார காட்சி: இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார்

Published On 2018-05-03 03:56 GMT   |   Update On 2018-05-03 03:56 GMT
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். இன்று அதிகாலை அழகர்மலைக்கு புறப்படுகிறார்.
மதுரையின் வரலாற்றை பறைசாற்றும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் பிரசித்தி பெற்றது.

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ராமராயர், தேனூர் மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார். பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார். அங்கு விடிய விடிய தசாவதார கோலங்களில் கள்ளழகர் காட்சி தந்தார். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகனாவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் கள்ளழகரை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா சென்றார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமானார்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தார்கள்.

அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆகி அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்பாடாகிறார்.

மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு இருப்பிடம் சென்று அடைகிறார்.

Tags:    

Similar News