ஆன்மிகம்
சித்திரை திருவிழாவின் 2-வது நாளான கரக ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2018-04-17 04:45 GMT   |   Update On 2018-04-17 04:45 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம்செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். ஆனால் மாசி மற்றும் சித்திரை மாதங்களில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது. அதற்கு பதிலாக மாசி மாதம் அமாவாசை அன்று மயானக்கொள்ளை உற்சவமும், சித்திரை மாத அமாவாசை அன்று சித்திரை திருவிழாவும் மிகவும் உற்சாகமாக நடைபெறும்.

அந்த வகையில் சித்திரைமாத அமாவாசையையொட்டி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதன் பின்னர் உற்சவர் அம்மன் அன்னவாகனத்தில் காயத்ரிதேவி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஊரில் இருந்து முக்கிய பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க பூசாரிகள் அக்னி குளத்துக்கு புறப்பட்டு சென்றனர்.


அமாவாசையை முன்னிட்டு அன்னவாகனத்தில் காயத்ரிதேவி அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பின்னர் விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு பலவித பூக்களால் ஆன கரகம் செய்யப்பட்டு, அதை 5 நாள் விரதமிருந்த செந்தில் பூசாரி தனது தலையில் வைத்து கட்டி ஊர்வலமாக புறப்பட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஆடியபடி காலை 7 மணியளவில் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து காலை 10 மணிக்கு மயானக்கொள்ளையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம்செய்தனர்.

விழாவையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் 3-வது நாளான இன்று(செவ்வாய்க் கிழமை) மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் வீதி உலாவும், இரவு கும்ப படையலுடன் காப்பு களைதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News